முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே. நகரிலும், திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தான்போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக போயஸ் கார்டனில் இருந்து காரில் புறப்பட்ட ஜெயலலிதாவை வழிநெடுக திரண்டிருந்த தொண்டர்களும், பொதுமக்களும் வரவேற்றனர்.
பலத்த வரவேற்புக்கிடையே, பர்மா பஜார், ராயபுரம் வழியாக சுமார் 12.20 மணியளவில் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தை ஜெயலலிதா வந்தடைந்தார். அங்குள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜா தேவியிடம் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர், வெளியே வந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அங்கு கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து, வெற்றியை குறிப்பிடும் வகையில் இரட்டை விரலை காட்டி கை அசைத்தார்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் சென்னையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.
நேற்றிரவு மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
இரவு திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கினார். இன்று காலை 11 மணியளவில் அவர் காட்டூரில் உள்ள தனது தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
பிற்பகல் 12.45 மணியளவில் அவர் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு கோட்டாட்சியரும் திருவாரூர் தொகுதி தேர்தல் அதிகாரியுமான முத்து மீனாட்சியிடம் கருணாநிதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.