துணிச்சல் இருந்திருந்தால் கருணாநிதி இந்த அவைக்கு வந்திருக்கலாமே – காவல் மானியக் கோரிக்கை மீது பதிலளித்த ஜெயலலிதா தாக்கு.
சட்டசபையில் இன்று காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பின் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-
தி.மு.க.வைச் சேர்ந்த உறுப்பினர்கள் 79 பேர் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்த காரணத்தால் பேரவைத் தலைவரால் அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதிலிருந்து ஒரு வார காலத்திற்கு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனை திரிக்கும் விதமாக, தி.மு.க.வினரை காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்பதை தடுக்கும் விதமாக இவ்வாறு செய்யப்பட்டதாக சொல்லி வருகின்றனர். அவர்களுக்கு உண்மையிலேயே விவாதங்கள் மீது அக்கறையும், நம்பிக்கையும் இருக்குமேயானால் 10 தி.மு.க. உறுப்பினர்கள் இன்று சட்டமன்றத்திற்கு வந்திருக்கலாமே? வந்தார்கள், ஆனால் உடனே வெளிநடப்பு செய்து விட்டார்கள்.
அவர்களில் இருவர் தங்கள் கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கலாமே? இன்று வந்தவர்களில் முன்னாள் அமைச்சர்கள் கூட இருந்தார்களே ? அவர்கள் என்ன பேசத் தெரியாதவர்களா? அவர்களில் இருவராவது தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருக்கலாமே?
2006-ஆம் ஆண்டு நாங்கள் எதிர்க்கட்சி வரிசையிலே இருந்த போது, அனைத்து அஇஅதிமுக உறுப்பினர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நேரத்தில், அவ்வாறு சஸ்பென்ட் செய்யப்படாத ஒரே சட்டமன்ற உறுப்பினராகிய நான் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று எங்களது கருத்துகளை எடுத்துரைக்கவில்லையா?
அந்தத் துணிச்சல் என்றைக்காவது தி.மு.க. தலைவருக்கு இருந்ததுண்டா? வருங்காலத் தலைவர் என்றும், இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் என்றும் தன்னை சொல்லிக் கொள்ளும் நபருக்கு அந்தத் துணிச்சல் இருக்கின்றதா? அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தாலும், தி.மு.க. தலைவர் சஸ்பெண்ட் செய்யப்படவில்லையே ? துணிவு இருந்தால், வந்திருக்கலாம், வந்திருக்க வேண்டும், பேசியிருக்க வேண்டும்.
காவல் துறை விவாதத்தில் பங்கேற்றால் தி.மு.க.வின் ஆட்சிக் காலத்தில் சட்டம்- ஒழுங்கு எவ்வாறு சீர் கெட்டிருந்தது என்பது பற்றி விவாதிக்கப்படும்; அதற்கு எந்த பதிலும் அளிக்க இயலாது என்பதால் தான் தி.மு.க.வினர் எவரும் இன்றைய விவாதத்தில் பங்கேற்கவில்லை என்றே நான் கருதுகிறேன். சஸ்பெண்ட் செய்யப்படாத தி.மு.க. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று வருவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன்.
அவர்கள் வந்திருந்தால், அவர்களுடைய ஆட்சிக் காலத்தில், அதாவது 2006 முதல் 2011 வரையிலான ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வெட்கக்கேடான சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமான சம்பவங்களை எல்லாம் எடுத்துரைக்கலாம் என்றும், அதற்கான ஆதாரங்களை இந்தப் போட்டோ ஆல்பத்தில் கொண்டு வந்து, அதை சபாநாயகர் அவர்களுக்கும் சமர்ப்பித்திருக்கிறேன். நான் தயாராக வந்தேன்.
ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாமல், பயன்படுத்த வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, ஊர் ஊராக சென்று, வீதி வீதியாகச் சென்று, வீடு வீடாகச் சென்று நாங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள் என்றும் கேட்டார். அதுமட்டுமல்ல, பாட்டும் பாடினார், பாடியும் பார்த்தார், எதுவும் பலிக்கவில்லை.
அமைதி, வளம், வளர்ச்சி என்ற கோட்பாட்டைக் கொண்ட ஆட்சியே தொடர வேண்டும்; மக்கள் நலன்களை முன்னிறுத்தி செயல்படும் ஆட்சியே தொடர வேண்டும்; அனைத்து தரப்பு மக்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் ஆட்சியே தொடர வேண்டும்; ஒதுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், வாழ்வில் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் ஆகியோரை கை தூக்கி விடும் ஆட்சியே தொடர வேண்டும்.
அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை முன்னிறுத்தும் ஆட்சியே தொடர வேண்டும்; சட்டம்-ஒழுங்கை பேணிப் பாதுகாத்து தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றிய ஆட்சியே தொடர வேண்டும், என்ற கருத்துகளை தமிழக மக்கள் கொண்டிருந்ததால் தான் 32 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக இரண்டாம் முறை எங்களுக்கு வெற்றியை அளித்து தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பிலே அமர்த்தி தமிழக மக்களுக்கு சேவை புரியும் வாய்ப்பை மீண்டும் எனக்கு நல்கியுள்ளார்கள்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.