ஆட்சிக்கு வந்தபிறகு ஊடகங்களுக்கு எதிரான முதல் வழக்கு; நக்கீரன் பத்திரிகை மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு.
சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ‘கடந்த மே 23ந் தேதியிட்ட நக்கீரன் பத்திரிக்கையில், ‘கண்டெய்னரில் பணம் பதுக்கல்; மறைக்கப்பட்ட உண்மைகள். சிக்கிய ஆவணங்கள்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி பொய்யானது. தமிழக மக்களின் பேராதரவுடன், நன் மதிப்பை பெற்று மீண்டும் இரண்டாவது முறையாக முதல்-அமைச்சர் பதவியேற்று உள்ள ஜெயலலிதாவின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக வேண்டுமென்றே உள் நோக்கத்துடன் அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியினால், முதல்-அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவதூறான செய்தியை வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால், சிறப்பு செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், செய்தியாளர் அருண் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
தமிழக முதல்-அமைச்சராக தொடர்ந்து இரண்டாவது முறை பதவி ஏற்றுள்ள ஜெயலலிதா சார்பில், ஊடகங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் முதல் அவதூறு வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.