வதந்திகளுக்கு காரணமான ஜெயலலிதாவே தன்னிலை விளக்கம் தர வேண்டும்: விஜயகாந்த்
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமத்திக்கபட்டு 21 நாட்களுக்கு மேல் ஆகிறது. முதலில் காய்ச்சல் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும், பிறகு நுரையிரல் தொற்று நோய் என்றும், செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றும் மேலும் பலநாட்கள் மருத்துமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டுமென்றும் தினம் ஒரு அறிக்கையை அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறது. மருத்துவமனை தரும் அறிக்கையில் தான் மாற்றம் உள்ளதே தவிர, ஜெயலலிதா உடல்நிலை எந்த மாற்றமோ, முன்னேற்றமோ இருப்பதாக தெரியவில்லை.
இந்த நிலையில் முதலமைச்சரின் இலாக்காகளை நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களிடம் ஒப்படைத்ததாக ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. செயல்படாத முதல்வரும், நிரந்தர ஆளுநரும் இல்லாத தமிழகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்வெட்டு அதிகரித்துள்ளது. அதேபோல் ஆயுதபூஜை பண்டிகை காலங்களில் விடுமுறை நாட்கள் என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு அரசு பேருந்துகளை சரியான முறையில் வசதி செய்து தராததால் தனியார் பேருந்து கட்டணம் உயர்ந்தது அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் தீபாவளி பண்டிகை காலங்களில் இதுபோன்ற சொந்த கிராமங்களுக்கு செல்கின்ற அனைவருக்கும் பேருந்து வசதி செய்து தரவேண்டும்.
அதேபோல் பல்வேறு ஊர்களில் குடிதண்ணீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத நிலை தொடர்ந்து கொண்டே உள்ளது. மக்களுக்கு மிக முக்கியமான குடிதண்ணீர், மின்சாரம், போக்குவரத்து அவசியமாகிறது. ஏழு கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தி இந்த அரசு மக்களுக்காக செயல்படும் அரசாக மாறவேண்டும். தினம் ஒரு தலைவர் அப்போலோ மருத்துவமனைக்கு செல்வதும், பின் வெளியே பத்திரிகையாளர்களை சந்தித்து முதலமைச்சர் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்று மருத்துவக்குழு கூறியதாகவும் சொல்லிக் கொண்டுள்ளனர்.
அப்போலோ மருத்துவமனை அரசியல் ஆதாயமாக செயல்படுவதாக பத்திரிகைகளில் செய்தி எழுதிகொண்டுள்ளனர். இதுவரை யாருமே ஜெயலலிதாவை சந்தித்ததாகவோ, ஜெயலலி தாவிற்கு நெருங்கிய தோழியான சசிகலாவை சந்தித்தகாக தகவல் இல்லை. நலம் விசாரிக்க செல்பவர்கள் இரண்டாம் தளத்திற்கு சென்றாதாகவும், அங்கு ஒருசில மருத்துவர்களையும், சில மந்திரிகளையும் சந்தித்ததாகவும் சொல்வது வாடிக்கையாக உள்ளது. வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிககை எடுக்கப்படும் என்று காவல்துறை மக்களையும், பத்திரிக்கையாள ர்களையும், மருத்துவமனை ஊழியர்களையும், மிரட்டுவதை காட்டிலும், இந்த வதந்திகளுக்கு காரணமான முதலமைச்சர் ஆகிய ஜெயலலிதாவே தன்னிலை விளக்கம் தந்து வாக்களித்த மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது’’என்று தெரிவித்துள்ளார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.