விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என கூறியவர் ஜெயலலிதா: செம்மலைக்கு ஸ்டாலின் பதில்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் செம்மலை தெரிவித்த கருத்துக்களால் சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. அதிமுக உறுப்பினர் செம்மலை தீர்மானத்தை முன்மொழிந்து பேசும்போது, திமுக தலைவர் கருணாநிதி என்று பலமுறை குறிப்பிட்டார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், முதலமைச்சரை ஜெயலலிதா என்று அழைக்கலாமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய செம்மலை, மேகதாது அணை விவகாரம், மீனவர் பிரச்சனை, இலங்கை தமிழர் பிரச்சனையில் சில கருத்துக்களை முன்வைத்தார். மேலும், நோக்கியா, பாக்ஸ்ஆன் ஆலைகள் மூடப்பட்டதற்கு அதிமுக அரசு காரணம் அல்ல என்றார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இலங்கை தமிழர் பிரச்சனையில் செம்மலை உண்மைக்கு மாறாக பேசுகிறார். போரின்போது பொதுமக்கள் உயிரிழப்பது இயல்புதான் எனக் குறிப்பிட்டவர் ஜெயலலிதா. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியவர் ஜெயலலிதா. நோக்கியா, பாக்ஸ்ஆன் ஆலைகள் மூடப்பட்டபோது அதிமுக அரசு நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் என்றார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.