ஜெயலலிதா உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க மாட்டார். இன்னும் சில வாரங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். போராட்டக்காரர்களுக்கு கருணாநிதி வேண்டுகோள்.
’’ தமிழகச் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடக்கவிருக்கிறது. அதற்கிடையே தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துக் கடைசியாகப் பொங்கியெழுந்து இந்த அரசுக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தி யிருக்கிறார்கள். குறிப்பாக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், சத்துணவு – அங்கன்வாடிப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம், மறியல், வேலை நிறுத்தம் என்று தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தினகரன் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்ததைப் போல இதற்கு முன் இத்தனைப் போராட்டங்களைத் தமிழகம் ஒரே நேரத்தில் சந்தித்ததில்லை என்று தான் கூற வேண்டும்.
இந்த மாதத் தொடக்கத்தில் ஆசிரியர்கள் மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்டார்கள். தமிழகம் முழுவதும் 75 சதவிகிதப் பள்ளிகள் அப்போது மூடப்பட்டன. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்திலே குதித்தார்கள். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதிலும் உள்ள 68 ஆயிரம் பள்ளி சத்துணவு மையங்கள், 73 ஆயிரம் அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி மையங்களில் பணி புரியும் இலட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக் கிறார்கள்.
பதினைந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வணிக வரித் துறை அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளைக் கேட்டு தமிழகத்தில் உள்ள 12,524 ஊராட்சிகளில் பணியாற்றும் முப்பதாயிரம் பேர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்று மாற்றுத் திறனாளிகள் போராடுகிறார்கள்.
இத்தனை பேர் போராடுகின்ற நிலையில் அ.தி.மு.க. அரசு அதுபற்றி யெல்லாம் ஏதாவது கவலைப்படுகிறதா? அவர்களுடைய கோரிக்கைகளைக் காது கொடுத்துக் கேட்கிறதா? முதலமைச்சர் ஜெயலலிதா அன்றாடம் கோட்டைக்கு வந்து காணொலிக் காட்சிகள் மூலம் ஒரு சில இலட்சம் ரூபாய்ச் செலவில் மட்டும் கட்டப்பட்ட கட்டிடங்களை யெல்லாம் திறந்து வைத்துவிட்டு, அரசு புகைப்படக்காரர்களை மட்டும் அழைத்து புகைப்படம் எடுத்து ஏடுகளுக்கு விநியோகம் செய்து விட்டு, “முதலமைச்சர்” பணி முடிந்து விட்டதாகக் கருதிப் புறப்பட்டு விடுகிறார். அதிகப் பட்சமாக “க்ரூப்” திருமணங்களை நடத்தி, “குட்டிக் கதைகளை” படித்து விட்டுப் போகிறார். முழுப் பக்க விளம்பரங்களுக்காகக் காத்துக் கிடக்கும் ஒரு சில ஏடுகள் அவற்றையெல்லாம் ஏடுகளில் பெரிதுபடுத்தி வெளியிட்டு, பத்திரிக்கா தர்மத்தைப் பாதுகாத்து விட்டதாக எண்ணி மகிழ்கிறார்கள். ஆனால் பல இலட்சம் அரசு ஊழியர்கள் அன்றாடம் போராடு கிறார்களே, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாதா? அவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் அங்கம் தானே? இதுவரை ஒரு முறையாவது முதலமைச்சர் அவர்களோடு பேசி கோரிக்கைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்திருக்கிறாரா? என்பதைப் பற்றி எந்த நாளேடும் சுட்டிக் காட்டிடத் தயாராக இல்லை.
போராடுபவர்களின் நெருக்கடியான நிலைகள் குறித்து நானும், தமிழகத்திலே உள்ள மற்ற எதிர்க் கட்சிகளும் எடுத்துக் காட்டியும் அவர்களை அழைத்துப் பேசுவதற்கு முதல் அமைச்சருக்கு மனம் வரவில்லை. ஒரு சில அமைச்சர்கள் பேசுவதாக அழைத்துப் பேசி விட்டு முதலமைச்சரைக் கேட்டு முடிவெடுப்பதாகக் கூறிக் கை கழுவி விட்டுப் போய் விடுகிறார்கள்.
அரசு அலுவலர்கள்-ஆசிரியர்களுக்கும், அ.தி.மு.க. அரசுக்கும் “ஏழாம் பொருத்தம்” என்பார்களே, அது போல ஒரு பொருத்தம் உண்டு. அ.தி.மு.க. அரசு எப்போது அமைந்தாலும், அரசு அலுவலர்களிடம் எப்படிப்பட்ட பாசத்தைக் காட்டுவார்கள்; அவர்களை எப்படி நடத்துவார்கள்; அவர்களுடைய கோரிக்கைகளை எத்தகைய பரிவோடு கேட்பார்கள்; என்பதற்கு ஏராளமான முன்னுதாரணங்கள் உண்டு.
தமிழக அரசு அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 23-10-2002 அன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தார்கள். அந்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் அளிக்கப்பட மாட்டாது என்றெல்லாம் எச்சரிக்கை செய்தவர் தான் முதலமைச்சர் ஜெயலலிதா. அதே போல வேலை நிறுத்தம் செய்யும் ஆசிரியர்கள் உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும். இல்லை என்றால் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று அ.தி.மு.க. அரசின் சார்பில் சர்வாதிகார ரீதியாக அறிக்கை வெளியிடப்பட்டது.
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த காரணத்தால், போராட்டத்தை ஒடுக்கும் வகையில் அரசு அலுவலர் சங்கத் தலைவர்கள் இரவோடு இரவாக எஸ்மா சட்டத்தின்கீழ் போலீசாரால் வீடு புகுந்து கைது செய்யப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்ட கொடுங்கோல் வரலாறும் ஜெயலலிதா அரசுக்கு உண்டு. “எஸ்மா” சட்டத்தின்படி தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 1 இலட்சத்து 70 ஆயிரம் பேர் ஒரே உத்தரவின்பேரில் கூண்டோடு “டிஸ்மிஸ்” செய்யப்பட்டு, முன்னெப்போதும் நடந்திராத நிகழ்வை உருவாக்கியதும் அ.தி.மு.க. ஆட்சியிலே தான். மக்கள் நலப் பணியாளர்களும், சாலைப் பணியாளர்களும் நீதி மன்றம் வரை சென்று சாதகமான உத்தரவுகள் பெற்றும்கூட, அவர்களை மீண்டும் பணியிலே அமர்த்த பிடிவாதமாக மறுத்து வருவது அ.தி.மு.க. ஆட்சி தான்! அரசு அலுவலர் களுக்கும், ஆசிரியர்களுக்கும் விரோதமாக அ.தி.மு.க. அரசு செய்த இத்தகைய கொடுமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஜெயலலிதாவின் இந்த கொடுங்கோல் வரலாற்றை அறிந்திருக்கும் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சத்துணவு அங்கன்வாடி அலுவலர்களும், வணிகவரித் துறை அலுவலர்களும், வருவாய்த் துறை அலுவலர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்துவதன் மூலம் இப்போது எந்தப் பயனும் நேர்ந்து விடப் போவதில்லை. கல்லில் நார் உரிக்க முடியாது! கானல் நீரை அருந்த முடியாது! அரசு ஊழியர்களிடம், பகைமைப் பாராட்டும் இந்த ஆட்சி முடிய இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கின்ற நிலையில், அவர்கள் போராட்டம் நடத்தி, தங்களை வாட்டி வதைத்துக் கொள்ளத் தேவையில்லை.
எனவே அ.தி.மு.க ஆட்சியின் சர்வாதிகார – பழி வாங்கும் அணுகு முறையை எண்ணிப் பார்த்து, போராட்டத்தில் ஈடுபட்டிருப்போர் அனைவரும் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, பணிக்குத் திரும்பி மக்கள் நலனுக்கான பணியைத் தொடர்ந்து ஆற்றுவதுதான், அவர்களுக்கும், அவர்களு டைய குடும்பத்தினருக்கும் நல்லது; காலம் கனியும், காரியம் கை கூடும், காத்திருப்பீர்! என்ற கருத்தை இந்த நேரத்தில் தெரிவிப்பது என்னுடைய கடமை எனக் கருதுகிறேன்!’ இவ்வாறு தெரிவித்திருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.