விவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர மேலும் சில நாட்கள் கேட்கிறார் ஆச்சார்யா. சுப்ரீம் கோர்ட் இன்று முடிவு.
சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வருகிறது.
22-வது நாளான நேற்று கர்நாடக அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தன்னுடைய 2-வது சுற்று வாதத்தில் கூறியதாவது:-
என்னுடைய நேற்றைய(செவ்வாய்க்கிழமை) வாதத்தில் வெளிநாடுகளில் இருந்து பெற்ற தொகையை சொத்துகள் என்று தவறாக வகைப்படுத்தி விட்டேன். இது வருவாய் கணக்கில் சேர வேண்டும். எனவே, என் வாதத்தில் இது தொடர்பான விவரங்களை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்.
ஜெயலலிதா குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரான சசிகலாவிடம் இருந்து ரூ.1.5 கோடி கடனாக பெற்று சொத்துகளை வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். இது எப்படி சாத்தியமாகும்? இது போன்று பல கணக் குகளை அவர்கள் முரண்பாடாக காட்டியிருக்கிறார்கள்.
இவ்வாறு ஆச்சார்யா கூறியபோது, நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘‘இதுபோன்ற விஷயங்கள் ஏற்கனவே இங்கு பலமுறை மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது. நாக்கு சுவைக்காக மீண்டும் மீண்டும் ஒரே பொருளை கேட்டுக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் வயிறு அந்த பொருளுக்கு ஒரு கட்டத்தில் இடம் கொடுக்காது. அஜீரணம் ஆகிவிடும்’’ என்றனர்.
ஆச்சார்யா தொடர்ந்து, ‘‘ஜெயலலிதா தமிழக முதல்-அமைச்சராக இருந்த 2002-ம் ஆண்டில் அவருக்கு எதிராக வழக்கு நடந்தபோது பல சாட்சிகளை பிறழ் சாட்சியங்களாக மாறியிருக்கின்றனர். அந்த சாட்சியங்களில் பலரிடம் மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு இதே நாளில் (மே 11) ஐகோர்ட்டில் தீர்ப்பு வெளியானது’’ என்றார்.
நீதிபதிகள் குறுக்கிட்டு ‘‘அதற்காக இன்றே நாங்களும் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறமுடியாது. மேலும் நீங்கள் இப்படியே உங்களுக்கான அதிக நேரத்தை எடுத்துக் கொண்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்? உங்களுக்கு பிறகு இன்னும் வாதங்கள் உள்ளன. சுப்பிரமணியசாமி தரப்பு வாதத்தை கேட்கவேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும் எதிர் பதில் வாதங்கள் உள்ளன. உங்கள் வாதத்தை எப்போது முடித்துக்கொள்வீர்கள்? என்று கேட்டனர்.
அதற்கு ஆச்சார்யா, ‘‘எனக்கு மேலும் 3 நாட்களாவது தேவை. குறைந்தது நாளை ஒரு முழுநாளாவது வேண்டும்’’ என்றார். அதற்கு நீதிபதிகள் ‘‘விடுமுறைக்கு முன்பு நாளை ஒரு நாள்தான் இருக்கிறது. விசாரணையை விடுமுறையிலும் தொடரலாமா?’’ என்று கேட்டனர்.
இதற்கு ஆச்சார்யா, விடுமுறையில் விசாரணை தொடரும் என்றால் எனக்கு சிறிது நேரம் வேண்டும் என்றும் குறைந்தது மே 30-ந் தேதியன்றுதான் தன்னால் முடியும் எனவும் கூறினார்.
இதற்கு நீதிபதிகள், இதுபற்றி இன்று (வியாழக்கிழமை) முடிவு எடுப்பதாக தெரிவித்தனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.