சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் என் முன் ஆஜராக வேண்டும்: நீதிபதி கர்ணன் உத்தரவு
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் தனது முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கர்ணன் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக உள்ளவர், தமிழ்நாட்டின் சி.எஸ். கர்ணன். இவர், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் உள்ளிட்ட பல நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறியதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து இவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் சம்மன் பெற்றும் ஆஜராகாத நிலையில், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிபதி கர்ணன் கடந்த மாதம் 31-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பினாகி சந்திர கோஷ், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் ஆஜர் ஆனார். இந்த வழக்கில் நீதிபதி கர்ணன் தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க 4 வாரம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் நீதிபதி கர்ணன், நேற்று கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் கையெழுத்திட்டு அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்தார்.
அதில் அவர், “மார்ச் 31-ந்தேதியன்று, எனது மனநலம் எப்படி இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் கேள்வி எழுப்பினார். அதை அவரது அமர்வில் இடம்பெற்றிருந்த 6 நீதிபதிகளும் வழிமொழிந்தனர். திறந்த நீதிமன்றத்தில் இவ்வாறு அவர்கள் கூறி என்னை அவமதித்தனர். எனவே அந்த 7 பேரும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச்சட்டம், 1989-ன்படி குற்றவாளிகள்” என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக நீதிபதி கர்ணன், கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் அமர்வு, என்னை வேண்டுமென்றே கெட்ட நோக்கத்துடன் அவமதித்தனர். அவர்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச்சட்டம், 1989-ஐ மீறிவிட்டனர். இது தொடர்பாக நான் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு குறித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்குமாறு அவர்களை கூறி உள்ளேன்.
வரும் 28-ந்தேதி காலை 11.30 மணிக்கு எனது ரோஸ்டேல் உறைவிட கோர்ட்டு (இல்லம்) முன்பாக 7 நீதிபதிகளும் ஆஜர் ஆவார்கள். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச்சட்ட மீறலுக்காக அவர்களுக்கு விதிக்கப்பட வேண்டிய தண்டனை பற்றிய தங்களது கருத்துகளை கூறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.