குற்றம் கடிதல் இயக்குநர் பிரம்மாவின் அடுத்த படத்தில் ஜோதிகா கதாநாயகி?
‘குற்றம் கடிதல்’ இயக்குநர் பிரம்மாவின் அடுத்த படத்தின் நாயகியாக நடிக்க ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
பிரம்மா இயக்கத்தில் வெளியாகி தேசிய விருதை வென்ற திரைப்படம் ‘குற்றம் கடிதல்’. அஜய், ராதிகா, சாய் ராஜ்குமார், பாவல் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை கிரிஷ்டி மற்றும் சதிஷ்குமார் இணைந்து தயாரித்திருந்தார்கள். செப்டம்பர் 2015ல் இப்படம் வெளியானது.
பள்ளிக் கல்வித் துறையின் சீர்திருத்தம், ஆசிரியர் – மாணாக்கர் உறவு, தவறு செய்யும் மாணவர்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு விவாதங்களைத் தூண்டக் கூடிய படமாக ‘குற்றம் கடிதல்’ உள்ளதால் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது வென்றது.
தற்போது, இயக்குநர் பிரம்மா தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தில் பெண்களுக்கான பிரச்சினைகளை அலசும் படமாக திரைக்கதை அமைத்திருக்கிறார்.
இப்படத்தின் பிரதான வேடத்தில் நடிக்க ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும், தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் முடிவானவுடன் ஜோதிகா ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
’36 வயதினிலே’ படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு ஜோதிகா இக்கதையைத் தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.