தேர்தலில் திமுக தோல்வியடைய தேர்தல் கமிஷனே காரணம். ஆங்கிலப்பத்திரிகைப் பேட்டியில் கருணாநிதி.
தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி: தேர்தல் தொடர்பான பல கருத்து கணிப்புகளில் தி.மு.க. தான் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. ஆனாலும் நீங்கள் தோல்வி அடைந்து இருக்கிறீர்கள். இதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்.
பதில்: தேர்தல் பணிகள் தொடங்கியதில் இருந்தே தேர்தல் கமிஷன் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டது. அவர்கள் ஆளும் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து செயல்பட்டார்கள். தி.மு.க. தரப்பில் இருந்து எத்தனையோ தடவை தேர்தல் கமிஷனிடம் புகார்களை தெரிவித்தோம். வாக்காளர்களுக்கு பணம் சப்ளை ஆவதாக தினமும் தகவல்கள் வந்தன. அமைச்சர்கள் மீதே ஏராளமான புகார்கள் கூறப்பட்டன. அமைச்சர்கள் பலர் தொகுதியில் இருந்தே விரட்டி அடிக்கப்பட்டனர். அப்படி இருக்க அவர்கள் எப்படி வெற்றிபெற முடியும்.
கரூர் அன்புநாதன் பிரச்சனை தெரியும். அவருடன் 3 அமைச்சர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். பல முறைகேடுகள் நடந்தன. திருப்பூரில் 570 கோடி ரூபாய் பிடிப்பட்டது. அதை வங்கி பணம் என்று மத்திய அரசு அறிவிக்க காரணம் என்ன? வருமான வரித்துறை, அமலாக்க துறையினர் விதிமுறைகளை மீறியதற்கு காரணம் என்ன?
என்றும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தேர்தல் கமிஷன் 100 கோடி ரூபாயை பறிமுதல் செய்தது. அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதையும் மீறி தி.மு.க. அதிக ஓட்டுக்களை பெற்றுள்ளது.
2 தொகுதிகளில் நாங்கள் 100 ஓட்டுக்கும் கீழ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறோம். 8 தொகுதிகளில் ஆயிரம் ஓட்டுக்கு கீழ் தோல்வி அடைந்திருக்கிறோம். 21 தொகுதிகளில் 5 ஆயிரம் ஓட்டுக்கு கீழ் தோல்வி அடைந்திருக்கிறோம்.
22 தொகுதிகளில் 10 ஆயிரம் ஓட்டுக்கு கீழ் தோல்வி அடைந்திருக்கிறோம். 172 தொகுதிகளில் அ.தி.மு.க.வை தி.மு.க.வை நேரிடையாக எதிர்கொண்டது. அதில் நாங்கள் 89 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். அ.தி.மு.க. 2 இடங்களில் டெபாசிட் இழந்தது. நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் பெற்றுள்ளோம். தி.மு.க. குறைந்து ஓட்டு வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்துள்ளது. ஆளும் கட்சியின் பண பலமும், தேர்தல் கமிஷனின் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளும் தி.மு.க.வை தோல்வி அடைய செய்துவிட்டன.
கே: ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலினுக்கு உரிய இடம் ஒதுக்கி மரியாதை கொடுக்கவில்லை என்று புகார் கூறியிருக்கிறீர்கள். ஆனால் அதற்கு முதல்-அமைச்சர் அளித்துள்ள விளக்கத்தில் நாங்கள் அவமரியாதை செய்ய வில்லை. மாநிலத்திற்காக தி.மு.க.வுடன் சேர்ந்து பணியாற்றவே விரும்புகிறோம் என்று கூறியிருக்கிறார். இது தமிழ்நாடு அரசியலில் ஒரு நல்ல தொடக்கமாக தெரிகிறதே?
ப: இதற்கு முன்பு நடந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை. ஒவ்வொரு தடவையும் அவர்கள் செய்யும் தவறுகளை நாங்கள் மறக்க வில்லை. பின்னர் ஏதாவது நொண்டி சாக்கு சொல்வது வாடிக்கையாக உள்ளது. இப்போது முதல்-அமைச்சர் மாநில நன்மைக்காக தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக கூறி இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு நல்லது கிடைக்கும் என்றால் ஜெயலலிதாவுடன் என்ன யாருடன் வேண்டுமானாலும் தி.மு.க. சேர்ந்து பணியாற்ற ஒருபோதும் மறுத்ததில்லை. அதை வரலாறு சொல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.