தூங்குபவர்களை எழுப்ப முடியும், தூங்குவது போல நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும்? கருணாநிதி கேள்வி
“கச்சத்தீவு” பற்றி தமிழகச் சட்டப்பேரவையில் நேற்றைய தினம் (20-6-2016) அன்று பிரச்சனை ஏற்பட்டு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கச்சத்தீவு பற்றிப் பேச கருணாநிதிக்கு அருகதை இல்லை என்று ஆவேசமாக முழங்கியிருக்கிறார். 1991ஆம் ஆண்டிலிருந்து அவர் இதே கதையைத் தொடர்ந்து பேரவையிலும், வெளியிலும் பல முறை கூறி, அதற்கு நான் அவ்வப்போது விளக்கமும் அளித்து விட்டேன். தூங்குபவர்களை எழுப்ப முடியும், தூங்குவது போல நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும்? இருந்தாலும் இப்போது அவர் “கச்சத்தீவு” பற்றியும், என்னைப் பற்றியும் பேசியிருப்பதால், மீண்டும் அது பற்றிய விளக்கத்தை ஒரு முறை அளிக்கிறேன்.
தனது ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன் என்று அறிக்கை விடும் ஜெயலலிதா பதினைந்து ஆண்டுக் காலம் ஆட்சியிலே இருந்த போது – கச்சத்தீவை மீட்கும் பிரச்சனையிலே தனது சபதத்தை நிறைவேற்ற உண்மையிலேயே அதில் உறுதியாக இருந்தால் அ.தி.மு.க. ஆட்சி ராஜினாமா செய்யும் என்று எப்போதாவது அறிவித்தது உண்டா?
விடுதலை நாள் விழாவிலே கோட்டை கொத்தளத்திலே இருந்து கொண்டு வாய் சவடாலாக முழங்கி விட்டு -அந்தப் பேச்சு ஏடுகளில் எல்லாம் கொட்டை எழுத்துக்களில் வெளி வந்ததே தவிர வேறு என்ன செய்தார்?
உச்சநீதி மன்றத்திலே வழக்கைப் போட்டு விட்டு, என் கடமை முடிந்து விட்டது என்று இருந்தாரே தவிர வேறு என்ன செய்தார்? இரண்டு மூன்று கடிதங்களை மத்திய அரசுக்கு எழுதி விட்டு, பிரதமரிடம் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்ததோடு சரி. ஆனால் நான் ஏதோ ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கை கட்டி, வாய் பொத்திக் கொண்டிருந்ததாக தற்போது கூறியுள்ளார்.
முதலில், மத்திய அரசால் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட போது தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது உண்மையா?
1974-ம் ஆண்டிலேயே ஆகஸ்ட் 21-ம் தேதியன்று தமிழகச் சட்டமன்றத்தில் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.(அந்தத் தீர்மானத்தின் நகலை இணைத்துள்ளார்)
எனவே தி.மு.க. அப்போது வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருக்கவில்லை.
மேலும் அந்தத் தீர்மானத்தில் நான் பேசும்போது, “கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்படக் கூடாது, தமிழ் மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்பதைப் பற்றி பல நேரங்களில் மத்திய பேரரசுக்கு தமிழக அரசு எடுத்துச் சொல்லி இருக்கிறது. நடைபெற்ற ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும் இந்தியா கச்சத்தீவை விட்டுத் தருவது கூடாது என்ற கருத்து தமிழக தி.மு.க. அரசின் சார்பாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது”
தமிழக அரசை இது போன்ற பெரிய பிரச்சனைகளில் மத்திய அரசு தன்னுடைய ஒப்புதலைக் கேட்கவில்லை; ஆக்க பூர்வமான முறையில் பிரதமர் முதல்-அமைச்சர் இது பற்றி ஆலோசனை நடத்துவதற்கு வாய்ப்புக் கூறுகள் வழங்கப்படவில்லை என்று நாம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.
அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு, 24.7.1974 அன்று தி.மு.கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் கண்டனப் போராட்டங்கள் நடத்தப்பட்டு, தஞ்சை, பாபநாசம் ஆகிய இடங்களில் நானே கண்டன கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறேன்.
கச்சத்தீவிலே நமக்குள்ள உரிமைகளுக்கெல்லாம் வழி வகுத்து விதிகள் செய்யப்பட்டன. அந்த உரிமைகள் தேவாலயத்திற்கும், கிறித்தவ ஆலயத்திற்கும் சென்று வருவதற்கான உரிமை, மீன்களை காய வைப்பதற்கும், மீன் பிடிப்பதற்குமான உரிமை, நம்முடைய மீனவர்கள் அங்கே தங்கள் வலைகளை காய வைப்பதற்கான உரிமை என்று பல உரிமைகள் நமக்கு இருந்தன.
நாமும் பல முறை அந்த விதிமுறைகளையெல்லாம் கொண்டு வர வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
இதெல்லாம் கச்சத்தீவினை நான் தாரை வார்த்து விட்டேன் என்பதற்கான அடையாளங்களா?
உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு பற்றியும் “டெசோ” கூட்டத்தில் நான் பேசியது பற்றியும் நேற்றையதினம் ஜெயலலிதா பேரவையில் பேசியிருக்கிறார்.
இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 368-வது பிரிவின்படி நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து சட்டம் இயற்றப்பட வேண்டும். கச்சத்தீவைப் பொறுத்தவரை அப்படி எந்தவொரு சட்டமும் இதுவரை நிறைவேற்றப்படாததால், கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது என்பது தான் உண்மை.
எனவே 1974-ம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், “டெசோ” அமைப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதென இந்தக் கூட்டம் தீர்மானிக்கின்றது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், “டெசோ” அமைப்பின் சார்பில் நான் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை 10-5-2013 அன்று தாக்கல் செய்திருக்கிறேன்.
“தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று தி.மு.கழகத்தின் சார்பில் இரா. செழியன் நாடாளுமன்றத்தில் கூறினார்.
20-4-1992 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா பேசும்போது, “கச்சத்தீவை மீட்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால் கச்சத்தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக் கூடிய, நடைபெறக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை” என்று கூறினாரா? இல்லையா?
இன்னும் சொல்லப்போனால், 30-9-1994-ல் தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவுக்கு எழுதிய கடிதத்தில், “தீவு நாடான இலங்கைக்கு, இந்தச் சின்னஞ்சிறிய தீவினை (கச்சத்தீவினை) இந்திய அரசு பிரித்துக் கொடுத்தது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலே நல்லுறவு நிலவிட வேண்டும் என்பதற்காகத்தான்” என்று தெரிவித்தது உண்டா இல்லையா?
மீண்டும் 23-7-2003 அன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தில், இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையே நல்லுறவுப் பேணப்படவும், தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வரும் உரிமைகள் காப்பாற்றப்படவும் உள்ள ஒரே வழி என்று குறிப்பிட்டு மேலும் எழுதும்போது, கச்சத்தீவையும், அதற்கு அருகிலே உள்ள கடல் பகுதிகளையும் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், வலைகளைக் காய வைப்பதற்கும், யாத்திரை செல்வதற்கும் நிரந்தர குத்தகைக்குப் பெறலாம்; அதே நேரத்தில் கச்சத்தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம் என்று அன்றைக்கு எழுதியவர்தான் இன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா.
மீண்டும் ஒரு முறை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், “கச்சத்தீவு பிரச்சனை என்பது மற்றொரு நாட்டுடனான பிரச்சனை. அதை மீட்கக் கூடிய அதிகாரம் மத்திய அரசிடம் தான் இருக்கிறது. மாநில முதல் அமைச்சருக்கு அந்த அதிகாரம் இருந்திருந்தால் அன்றைக்கே கச்சத்தீவு மீட்கப்பட்டிருக்கும்” என்றார். அதையெல்லாம் மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டுத் தான் இப்போது கச்சத்தீவை நான் தான் தாரை வார்த்தேன் என்று பேரவையில் பேசுகிறார்.
உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து அவர்களிடம் கருத்தறிந்திருக்கிறேன். ஆனால் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் ஒரே ஒரு முறையாவது தமிழ்நாட்டிலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து கச்சத்தீவை மீட்பது பற்றி கலந்தாலோசனை நடத்தியது உண்டா?
ஆனால் எந்தப் பிரச்சனையிலும் இரட்டை வேடம் போடும் ஜெயலலிதா, கச்சத்தீவுப் பிரச்சனையில், “கச்சத்தீவை மீட்பது விரைவில் நடக்கக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை” என்றும், “கச்சத்தீவைப் பிரித்துக் கொடுத்தது, இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவு வேண்டும் என்பதற்காகத் தான்” என்றும்; “கச்சத்தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம்” என்றும்; சொன்னவர் என்பது பதிவாகி இருக்கிறது.
எனவே ஜெயலலிதா அவ்வப்போது நினைத்துக் கொண்டு என் மீது வசைபுராணம் பாடுவதை இனியாவது நிறுத்திக் கொள்வது நல்லது.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.