கால்நடைகள் விற்பனை மீதான தடை பாசிச நடவடிக்கை: கேரள சட்டப்பேரவையில் கண்டனம்
சந்தைகளில் இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்ய மத்திய அரசு விதித்துள்ள தடையானது பாசிச நடவடிக்கை என கேரள சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த தடை தொடர்பாக விவாதிப்பதற்காக கேரள சட்டப்பேரவை கூடியது. இதில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி உறுப்பினர்களும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இணைந்து மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராகப் பேசினர்.
தடை உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜகவின் ஒரே உறுப்பினரான ஓ.ராஜகோபால் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கண்டித்து இருதரப்பு உறுப்பினர்களும் பேசினர். இத்தடை ஒரு பாசிச நடவடிக்கை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
டெல்லியில் நேற்று முன்தினம் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மீதான தாக்குதலும் அவையில் எதிரொலித்தது. உடல் பலத்தை பிரயோகித்து அரசியல் போட்டியாளர்களின் குரலை ஒடுக்க சங் பரிவார அமைப்புகள் முயற்சி செய்வதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
“கால்நடைகள் விற்பனை மீதான தடை மத அடிப்படையிலானது. இது தொழிலாலர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிரானது. எனவே இதை திரும்பப் பெறவேண்டும்” என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
முதல்வர் பினராயி விஜயன் பேசும்போது, “கேரளாவில் இத்தடை நடைமுறைக்கு சாத்தியமற்றது. இங்கு 95 சதவீத மக்கள் இறைச்சி உண்கின்றனர். கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,552 கோடி மதிப்பிலான 2.5 லட்சம் டன் இறைச்சி விற்பனையாகிறது. இந்தப் பிரச்சினையை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கேரள அரசு கொண்டுசெல்லும்” என்றார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.