கலாபவன் மணி வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கேரள அரசாங்கம் முடிவு.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த கலாபவன் மணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
அவரது உடலில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. இதனால் அவரை யாரோ வேண்டுமென்று விஷம் கொடுத்து கொன்றிருக்கலாம் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கலாபவன் மணியின் சகோதரர் ஆர்.எல்.வி. ராமகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் திருவனந்தபுரத்தில் முதல் மந்திரி பினராய் விஜயனை சந்தித்து, கலாபவன் மணி மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்தனர்.
மேலும் கடந்த 2 மாதங்களாக கேரள போலீசார் கலாபவன் மணி மரணம் குறித்து நடத்தும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லையென்றும், அவரது உடலில் கலந்திருந்த விஷம் குறித்து எழுந்த சந்தேகம் குறித்து அது தொடர்புடையவர்களிடம் விரிவான விசாரணை எதுவும் நடத்தவில்லை என்று குறைபட்டுக் கொண்டனர்.
கேரள போலீசாரின் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் இந்த மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக அவர்கள் முதல்–மந்திரி பினராய் விஜயனிடம் மனுவும் அளித்தனர்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட முதல் மந்திரி பினராய் விஜயன், கலாபவன் மணியின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க முடிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், கலாபவன் மணி சாவில் இருக்கும் மர்ம முடிச்சு விரைவில் வெளியுலகத்திற்கு தெரியவரும்.
-அமுதவன்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.