பா.ஜனதாவை விமர்சிக்கும் தகுதி குஷ்புவுக்கு இல்லை: தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது என்பதற்கு தினந்தோறும் நடைபெறும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் சான்றாக அமைந்துள்ளது. குற்ற சம்பவங்களில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். போலீஸ் துறையில் காலியாக உள்ள 20 ஆயிரம் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்பவேண்டும்.
கல்லூரிகளில் விரிவுரையாளர்கள், முதல்வர்கள் பணியிடம் உள்பட அரசு துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் பணியில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடுகிறது. ஆகவே அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே மக்களுக்கு நியாயம் கிடைக்கும்.
கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர், விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்பக்கோரி பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் வரும் 18-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
2-ம் கட்டமாக பள்ளி, கோவில்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. விரைவாக பூரண மதுவிலக்கை கொண்டுவதற்கான முயற்சியையும் எடுக்கவேண்டும். சிறார் இல்லத்தில் சிறுவர்கள் தப்பியோடியதும், அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது தற்கொலைக்கு முயன்றதும் வேதனையளிக்கிறது.
விசாரணையை தாமதப்படுத்தியதும், சிறார் இல்லத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் கொடுக்காமல் அடிமைகள் போல் நடத்துவதே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று கருதுகிறேன். சிறார் இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் மீண்டும் திருந்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும்.
பாலாற்றின் குறுக்கே புதிதாக அணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சி கண்டிக்கத்தக்கது. இதனை தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
டெல்லியில் நடைபெற உள்ள முதல்-அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் பங்கேற்று மாநில மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தவேண்டும்.
இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: இஸ்லாமிய மத போதகரான ஜாகீர் நாயக் பேச்சை மத்திய அரசு ஆய்வு செய்வது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது இல்லையா?
பதில்: ஜாகீர் நாயக் பேச்சு பிரிவினையை தூண்டும் வகையில் இருப்பதால் வங்காளதேசம், கனடா உள்ளிட்ட பல வெளிநாடுகள் அவருடைய பேச்சுக்கு தடை விதித்துள்ளன. கருத்து சுதந்திரம் ஒருவரின் உயிரை கொல்லுமானால் அதனை ஏற்கமுடியாது.
கேள்வி: தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்துள்ள நிலையில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்வாரா? என்று குஷ்பு விமர்சனம் செய்துள்ளாரே?
பதில்: குஷ்பு விமர்சனம் செய்யும் அளவுக்கு தமிழக பா.ஜனதா இல்லை. அதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை. சட்டசபை தேர்தலுக்கு பொறுப்பு ஏற்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்யவில்லை. அப்படி இருந்தால் தேர்தல் முடிவு வெளியாகிய உடன் அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். உள்கட்சி விவகாரத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்திருக்கிறார்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.