முக்கிய தலைவர்கள் குறிவைக்கும் தொகுதிகள்.
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு. தி.க.–மக்கள் நலக் கூட்டணி, பா.ஜனதா, பா.ம.க. ஆகிய 5 முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்க இன்னும் 19 தினங்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதோடு தலைவர்களும் தங்கள் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ‘குறி’ வைத்து உள்ளனர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. தலித்துகள் அதிகம் உள்ள இடம் என்பதால் அவர் அங்கு நிற்கலாம்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியிலும், 2006–ல் விருத்தாச்சலத்திலும் போட்டியிடுட்டு வெற்றி பெற்றார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவியும், மகளிர் அணி செயலாளருமான பிரேமலதா முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.
மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து கூட்டணி உருவாக காரணமாக இருந்த அவர் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வரும் பிரேமலதா போட்டியிடும் தொகுதி எது என்பது முடிவு செய்யப்படவில்லை.
விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி தொகுதியில் அவர் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீசும் போட்டியிடுகிறார். 2006 சட்டமன்ற தேர்தலில் அவர் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டார். 2009 பாராளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சியிலும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் (2014) பா.ஜனதா கூட்டணி சார்பில் சேலத்திலும் போட்டியிட்டார். இதில் அனைத்திலும் தோற்றார். இந்த முறை வெற்றி வாய்ப் ள்ள தொகுதியை அடையாளம் கண்டு வருகிறார்.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தலித்துக்கள் அதிகம் நிறைந்த கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் தொகுதியிலும், ம.தி.மு.க. தலைவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியிலும் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
இடதுசாரி தலைவர்கள் கட்சி தலைமை முடிவுக்காக காத்திருக்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் ஆர்.முத்தரசன் கூறும் போது,
தேர்தலில் போட்டியிட டிக்கெட் எதுவும் கேட்கவில்லை. கட்சி விருப்பப்பட்டால் போட்டியிடுவேன் என்றார்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கேட்ட போது அவர் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார்.
பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டி தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.