வாகனங்களை மிரட்டிவந்த சிங்கம் சாலை விபத்தில் மரணம்.
குஜராத் மாநிலத்தின், சவுராஷ்ட்டிர இனமக்கள் அதிகமாக வசிக்கும் கிர் சோம்நாத் மாவட்டத்தில், உலகப் புகழ் பெற்ற ஆசிய சிங்கங்களுக்கான கிர் வனவிலங்கு காப்பகம் உள்ளது.
இங்கு ஐநூறுக்கும் மேற்பட்ட சிங்கங்கள் வாழ்ந்து வருகின்றன. இவற்றில் 268 சிங்கங்கள் ஜுனகத் மாவட்ட வனப்பகுதியிலும், 174 சிங்கங்கள் அம்ரேலி மாவட்ட வனப்பகுதியிலும் சுற்றித் திரிந்து வருகின்றன.
கடந்த இருநாட்களுக்கு முன்னர் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள அம்பாரியா கிராமத்தை சேர்ந்த 62 வயது முதியவரை ஒரு சிங்கம் தாக்கி கொன்றதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அம்ரேலி மாவட்டம், ரஜுலா தாலுகாவில் உள்ள சாலைப் பாலம் வழியாக நேற்று முன்தினம் இரவு வந்த பஸ்சின் குறுக்கே திடீரென்று ஒரு சிங்கம் வந்து நின்றது.
சாலையை கடக்காமல் குறுக்கும், நெடுக்குமாக நடந்த அந்த பெண் சிங்கத்தை கண்டதும் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பீதியில் அலறத் தொடங்கினர். இதேபோல், பஸ்சின் பின்னால் வந்த வாகனங்களில் வந்த மற்றவர்களும், எதிர்திசையில் வந்த மற்ற வாகனங்களில் வந்தவர்களும் சாலையின் குறுக்கே கம்பீரமாக கர்ஜித்தபடி நின்ற சிங்கத்தை கண்டு வெலவெலத்துப் போயினர்.
சுமார் அரை மணிநேரம்வரை அந்த இடத்தை விட்டு அகலாமல் சாலை மறியலில் ஈடுபட்ட அந்த சிங்கம், பின்னர் பாலத்தின் மீதிருந்து கீழே குதித்து, காட்டுக்குள் ஓடி மறைந்து விட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலை ரஜுலா தாலுகாவில் உள்ள பிப்பாவ் சாலையை அதே சிங்கம் கடக்க முயன்றது. அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அந்த பெண் சிங்கம் பரிதாபமாக பலியானது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.