கோவையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட பரிதாபத் தோல்வி. கம்யூனிஸ்ட் மேலிடம் அதிர்ச்சி.
கோவை தொகுதிகளில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சி அதிர்ச்சி அடைந்திருக்கிறது. சுதந்திரத்திற்குப் பின்னர் கோயம்புத்தூர் ஒவ்வொரு தேர்தலிலும் ஏறக்குறைய கம்யூனிஸ்டுகளின் கோட்டை போலவே விளங்கிய ஒரு தொகுதி. நிறைய மில் தொழிற்சாலைகள் இருப்பதனால் தொழிலாளர்களின் நலனில் அதிகபட்ச அக்கறை செலுத்திவந்த கட்சிகளில் முதன்மையான கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி விளங்கியது. அதனால் தொழிற் சங்கங்களும் கொடிகட்டிப்பறந்தன. காங்கிரஸ்காரர்கள்கூட கம்யூனிஸட்டுகளின் அடுத்த நிலையில் சோசலிஸ்ட் பார்வை கொண்டே தொழிற்சங்கங்களை நடத்தினர். அதன் விளைவாகவே கே.ரமணி, ஆர்.வெங்கிடு, பார்வதி கிருஷ்ணன், யு.கே.வெள்ளியங்கிரி, கே.சி.கருணாகரன், போன்ற வர்களெல்லாம் கோவை மாவட்டத் திலிருந்து எம்பி, எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்படி, கம்யூனிஸ்ட்களின் கோட்டை எனப்பட்ட கோவையின் மையப் பகுதியான கோவை தெற்கு, கவுண்டம்பாளையம் தொகுதிகளில் 4-வது இடத்துக்குச் சென்றுள்ளது இக்கட்சி. இதுகுறித்து இக்கட்சியின் தொண்டர்கள் சிலர் கூறியதாவது:
தொழிற்சங்க இயக்கங்களை முதலாளிகள் நீர்த்துப்போக வைத்தது கட்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பெரும்பாலும் திமுக, அதிமுக அணியில் பங்கேற்று சில தொகுதிகளில் வெல்வது என்ற நிலையால் கட்சியின் தனித்துவ அடையாளம் தகர்ந்து வந்துள்ளது.
கட்சி குறிவைத்தது சிங்காநல்லூர் தொகுதி. இங்கேதான் ஏற்கெனவே கே.சி.கருணாகரன், ஆர்.வெங்கிடு போன்றவர்கள் வென்றுள்ளனர். இத்தொகுதிக்கு உள்ளிட்ட வார்டுகளில் கவுன்சிலர்களும் தொடர்ந்து இருந்து வந்துள்ளனர். எந்த கூட்டணி என்றாலும் அதில் இங்கேயே சீட் வாங்கி போட்டியிட அனைத்து ஆயத்தப் பணிகளிலும் தயார் நிலையில் இருந்தனர்.
ஆனால், சிங்காநல்லூரில் வைகோ போட்டியிடுவதாகக் கூறி, மதிமுக இத் தொகுதியை எடுத்துக் கொண்டது. அதனால் கூட்டணியில் கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட, வேறு வழியில்லாமல் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம்.
தொகுதிக்குள் இருக்கும் கட்சிக் கிளைகள், தொண்டர்கள் பலம் போதாமல் சிங்காநல்லூர் தொகுதியை சேர்ந்த தொண்டர்களை உள்ளடக்கியே பிரச்சாரத்தை ஈடுகட்ட முடிந்தது. கூட்டணிக் கட்சியிலும் பெரிய அளவில் ஒத்துழைப்பு இல்லை. மார்க்சிஸ்ட் கட்சி தனியாக போட்டியிட்டது போன்ற சூழலே பிரச்சாரத்தில் ஏற்பட்டது.
ஆனால், எதிரணியில் அதிமுக, திமுக, பாஜக மூன்று வேட்பாளர்களுமே பிரச்சாரம் உள்ளிட்ட சகல ‘விஷயங்களிலும்’ சமபலத்தில் இருந்தனர். பாஜக வேட்பாளருக்கு நடிகர், நடிகைகள் மட்டுமல்ல பெயர் வெளியே தெரியாத மத்திய அமைச்சர்கள் கூட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தவிர, ஜெயின் சமூகம் போன்ற சமூகத்தினரின் ஆதரவை பெற முடிந்தது. இப்படி மற்றவர்களுக்கு ஒரு பக்கம்தான் அடி என்றால் இங்கே மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு சகல பக்கத்திலிருந்தும் அடி.
எனவேதான் 4-ம் இடத்துக்கு (பாஜக: 33,113 வாக்குகள், மார்க்சிஸ்ட்: 7,248 வாக்குகள்) செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
தவிர விஜயகாந்தைத் தலைவராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்கவேண்டிய இக்கட்டான நிலைமைக்கு கம்யூனிஸ்ட் கட்சியும் ஆளானது. தேர்தல் மேடைகளில் விஜயகாந்த் நடந்துகொண்டவிதம் கம்யூனிஸ்டைப்போன்ற ஒரு பாரம்பரியக் கட்சிக்கு உகந்ததாக இல்லை. ஆனாலும் அரசியல் ரீதியாக அதனை மென்று விழுங்கிக்கொண்டு அவரையே தலைவராகச் சொல்லிக்கொண்டிருந்ததை லட்சியப் பிடிப்புள்ள பொதுமக்களும் இளைஞர்களும் ஏற்கவில்லை என்பதனாலேயே இந்தப் பரிதாப நிலைமைக்கு கம்யூனிஸ்டுகள் ஆளானார்கள் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் பார்வை.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.