சுற்றுலா வளர்ச்சியில் சிறந்த மாநிலம்: மத்திய பிரதேசத்துக்கு தேசிய சுற்றுலா விருது
பயணம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் பல்வேறு பிரிவுகளில் மத்திய சுற்றுலாத்துறை சார்பில் தேசிய சுற்றுலா விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில், 2014-2015ம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுகள் டெல்லியில் வழங்கப்பட்டன. மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.
இதில், சுற்றுலாத் துறையில் விரிவான வளர்ச்சியை ஏற்படுத்தியதில் சிறந்த மாநிலமாக மத்திய பிரதேசம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த பிரிவில் குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தன.
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபூர் ரெயில் நிலையம் சுற்றுலாவாசிகளுக்கு உகந்த சிறந்த ரெயில் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு, ‘சிறந்த சுற்றுலா நட்பு ரெயில் நிலையம்’ என்ற விருதினை தட்டிச்சென்றது. மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு சிறந்த விமான நிலையம் விருது வழங்கப்பட்டது.
சிறந்த பாரம்பரிய நகர விருது தெலுங்கானாவின் வாராங்கல் நகருக்கும், சிறந்த ஓட்டல் விருது கோவாவின் தாஜ் ஒக்சோடிகா ஓட்டலுக்கும் கிடைத்தது. சிறந்த பாரம்பரிய ஓட்டல் விருதுகளை உதய்பூரின் பரே பிரகாஷ் பேலஸ், கோட்டயம் கோகோனட் லாகூன், பிகானரில் உள்ள காஜ்னர் பேலஸ் ஆகிய ஓட்டல்கள் பெற்றன.
விழாவில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி மகேஷ் சர்மா மற்றும் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.