போதை மருந்து கடத்தலில் நடிகை மம்தா குல்கர்னிக்கு தொடர்பு
மராட்டிய மாநிலம் தானே நகரில் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது அவர் தெரிவித்த தகவலின் பேரில், சோலாப்பூர் அருகே ஒரு தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கிருந்து 18½ டன் எடையுள்ள ‘எபெட்ரின்’ என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் மதிப்பு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி ஆகும். அங்கு போதை மருந்து தயாரித்து கென்யா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது. இந்த போதை மருந்து தயாரிப்பு மற்றும் கடத்தல் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
போதைப்பொருளை தயாரித்த அந்த நிறுவனத்தின் 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. அந்த நிறுவனத்தின் இயக்குனரான முகேஷ் ஜெயின் என்பவருக்கும், பிரபல இந்தி நடிகை மம்தா குல்கர்னியின் கணவருமான விக்கி கோஸ்வாமி என்பவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக விசாரணையில் கண்டறியப்பட்டது. போதை மருந்து கடத்தலில் விக்கி கோஸ்வாமியுடன் சேர்ந்து மம்தா குல்கர்னியும் முக்கிய பங்கு வகித்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, நடிகை மம்தா குல்கர்னியும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து தானே நகர போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
போதை மருந்து தயாரிப்பு மற்றும் கடத்தலில் விக்கி கோஸ்வாமியும், மம்தா குல்கர்னியும் கென்யா நாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையின் போது போலீசாரிடம் அவர்கள் தெரிவித்த தகவல்கள் மற்றும் அமெரிக்க போதை மருந்து கடத்தல் தடுப்பு அமலாக்கப்பிரிவு அளித்த தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் இருவரையும் அங்கிருந்து இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதற்காக ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் மூலமாக அவர்களுக்கு ‘ரெட் கார்னர்’ நோட்டீசு அனுப்பப்படும். சி.பி.ஐ. உதவியுடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், சர்வதேச போதை மருந்து கடத்தல் கும்பலுடன் இணைந்து மம்தா குல்கர்னி செயல்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. கென்யாவின் மொம்பாசா நகரில் கடந்த ஜனவரி 8-ந் தேதி போதை மருந்து கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் நடத்திய கூட்டத்தில் மம்தா குல்கர்னியும் கலந்து கொண்டு உள்ளார். துபாயில் ஏப்ரல் 8-ந் தேதி நடந்த போதை மருந்து கடத்தல் கும்பல் கூட்டத்தில் விக்கி கோஸ்வாமியும் மம்தா குல்கர்னியும் கலந்து கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
மம்தா குல்கர்னியின் வங்கி கணக்குகளையும், முதலீடுகளையும் ஆய்வு செய்து வருகிறோம்.
இவ்வாறு பரம்வீர் சிங் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.