மர்லின் மன்றோ அணிந்த உடை ரூ.33 கோடிக்கு விற்பனை
நடிப்பில் மிகச்சிறந்து விளங்கிய ஹாலிவுட் நடிகைகள் பலர் உண்டு. ஆனால் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களை, தன் அழகாலும், கவர்ச்சியாலும் கட்டிப் போட்ட கட்டழகி மர்லின் மன்றோ மட்டுமே.
அகில உலகக் ‘கனவுக் கன்னி’ அவர் ஒருவரே.
இவ்வளவு புகழ் பெற்றிருந்தும் அவர் வாழ்க்கையில் நிம்மதி இல்லை. இளமையில் வறுமையின் கொடுமையை அனுபவித்தார். பல போராட்டங்களைச் சந்தித்த பிறகே, திரை உலகில் புகழ்பெற முடிந்தது.
வெளி உலகத்தில் மர்லின் மன்றோ பெரும் புகழ் பெற்றிருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை துயர் சூழ்ந்தது. மர்லின் மன்றோ தன் தினசரி வாழ்க்கையிலே மன அமைதிக்கும், செயல்திறனுக்கும் மாத்திரை மருந்துகளையே நம்பியிருந்தார். அதற்கு அடிமைப்பட்டுக்கிடந்தார்.
அக்காலப் பெரும் பணக்காரர்கள் மன்றோவின் ஒரு கண் வீச்சுக்கு காத்து கிடந்தும், அவரது திருமண வாழ்க்கை கண்ணாடித் துண்டுகள் போல உடைந்து சிதறியது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஜான் எஃப் கென்னடியுடன் மர்லின் மன்றோவுக்கு ரகசிய தொடர்பு இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், கடந்த 1962ம் ஆண்டு ஜனாதிபதியான ஜான் எஃப் கென்னடியின் 45-வது பிறந்த நாளில் பங்கேற்ற மர்லின் மன்றோ ஒரு ஆடம்பரமான உடையை அணிந்திருந்தார்.
பின்னர், மேடையில் ஏறிய மர்லின் மன்றோ ‘Happy Birthday Mr. President’ என்ற வாழ்த்தை அவர் பாடலாகவே பாடி அசத்தினார்.
இந்நிகழ்வு நடைபெற்ற 3 மாதங்களுக்கு பிறகு அளவுக்கு அதிகமான போதை மருந்தை எடுத்துக்கொண்டதன் விளைவாக மர்லின் மன்றோ உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து, 1963ம் ஆண்டு ஜான் எப் கென்னடி ஊர்வலம் ஒன்றில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.இந்நிலையில், ஜான் எப் கென்னடியின் பிறந்த நாள் நிகழ்ச்சியின்போது மர்லின் மன்றோ அணிந்திருந்த அந்த ஆடை தான் தற்போது ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.
சுமார் 2,500 படிகங்கள் பதிக்கப்பட்ட அந்த ஆடையை Ripley’s Believe It or Not என்ற அருங்காட்சியகத்தின் உரிமையாளர் 4.8 மில்லியன் டாலருக்கு (33 கோடி ரூபாய்) வாங்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.