மறைந்த அப்துல் கலாமுக்கு மணிமண்டபம் ; 30 கோடியில் எழுப்பப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கடந்த ஆண்டு ஜூலை 27-ந் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்தபோது மரணம் அடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான ராமேசுவரம் அருகே உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இங்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று கலாமின் பிறந்த நாளான கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
தொடக்கத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்த கலாமின் நினைவிடம் புறக்கணிப்புக்கு உள்ளாகி நாளடைவில் மாடுகள், நாய்கள் அங்கு வந்தன. இதைதொடர்ந்து அப்துல் கலாமுக்கு மத்திய அரசு அறிவித்தவாறு விரைவில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று அவரது சகோதரர் முத்துமீரா மரைக்காயர் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் முதல் கட்டமாக கலாமின் நினைவிடத்தை சுற்றி சுவர் அமைக்கும் பணி ஜனவரியில் தொடங்கியது. நேற்று மத்திய அரசின் பொதுப்பணித் துறை சார்பில் நில அள வீட்டுத்துறை அதிகாரிகள் பேய்க்கரும்பு நினைவிடத்தை அளவிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
அப்துல்கலாம் மணி மண்டப பணிகளுக்காக முதல் கட்டமாக ரூ.30 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கலாம் நினைவிடத்தில் சுற்றுச்சுவர் கட்டும்பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் நிறைவடைந்துவிடும்.
தற்போது மத்திய பொதுப் பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வே அறிக்கையை இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் (டி.ஆர்.டி.ஓ.) ஒப்படைக்கப்படும்.
கலாம் நினைவிடத்தை பொதுமக்கள் வடிவமைக்க வேண்டும் என்று ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் விரும்புகிறது. இதற்காக கலாம் நினைவிடத்தை வடிவமைப்பதற்கான போட்டியை விரைவில் டி.ஆர்.டி.ஓ. அறிவிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.