பசு பாதுகாப்பு என்ற பெயரில் சமூக விரோத செயல்: நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
சமீப காலமாக பசுக்களை பாதுகாப்பதாகக் கூறி குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது சொந்த சகோதர, சகோதரிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு சமம் என்றார்.
மேலும், “பல நூற்றாண்டுகளாக இன்னல்களை அனுபவித்த தலித் மக்களை மேலும் சித்ரவதைக்குள்ளாக்க வேண்டாம் என்று தெரிவித்த மோடி, தலித் மக்கள் மீது அன்பு காட்டாதவர்களை உலகம் ஒருபோதும் மன்னிக்காது.
தாக்குதல் நடத்துபவர்களும், துப்பாக்கியால் சுடுபவர்களும் தம்மை வேண்டுமானால் குறிவைக்கட்டும் தலித்துக்கள் மீது அவர்கள் நடத்த வேண்டாம்” என பிரதமர் மோடி ஆவேசமாகக் கூறினார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பசுமாடுகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பசுக்களை கொல்வோர் மீது தனி நபரோ அல்லது கும்பலோ சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தாக்குதலில் ஈடுபடக் கூடாது என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.