தன்னுடைய மனைவியையே காப்பாற்ற முடியாதவர் மோடி; நாட்டை எப்படிக் காப்பாற்றுவார்? நக்மா கேள்வி.
தமிழக மகளிர் காங்கிரஸ் புதிய பொறுப்பாளராக ஜான்சிராணி நியமிக்கப்பட்ட பிறகு முதல் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.
இந்த கூட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் நடிகை நக்மா, செயலாளர் ஹசீனா சையத், செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். கூட்டத்தில் நக்மா பேசியதாவது:–
கடந்த 18 வருடங்களாக சோனியா காந்தி காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து வருகிறார். காங்கிரசைப்போல் எந்த கட்சியும் நாட்டுக்கு நல்லது செய்தது கிடையாது.
ராகுல்காந்தி பெண்கள் உரிமைக்காக போராடி வருகிறார். பா.ஜனதா கட்சி வாக்குறுதிகளை மட்டும் கொடுக்கும். கட்சி பல இடங்களில் ஊழல்களிலும் ஈடுபட்டு இருக்கிறது. மக்களை பிரித்தாளும் அரசியலை செய்து வருகிறது.
தேர்தல் நேரத்தில் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் தருவோம். கருப்பு பணத்தை மீட்டு வருவோம். பெட்ரோல்–டீசல் விலையை குறைப்போம் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்து உள்ளது. ஆனால் பெட்ரோல் விலையை குறைக்கவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. இன்று அந்த சட்டத்தின் மூலம்தான் மோடி மனைவி யசோதாபென் தனது உரிமைகளுக்காக போராடி வருகிறார். மனைவியையே காப்பாற்ற முடியாத மோடியால் நாட்டு மக்களை எப்படி காப்பாற்ற முடியும்.
தமிழகத்தில் மக்களுக்கு இலவசங்களை கொடுக்கிறார்கள். ஆனால் வாழ்வாதாரங்களை செய்து கொடுக்கவில்லை. கல்வி, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கவில்லை. விழுப்புரத்தில் கல்லூரி மாணவிகள் 3 பேர் இறந்து இருக்கிறார்கள். அந்த கல்லூரியில் நடந்த பிரச்சினைகள் பற்றி ஏற்கனவே மாணவிகள் பத்திரிகைகளில் பேட்டி கொடுத்து உள்ளனர். அப்போது மனித வள மந்திரி நடவடிக்கை எடுக்காதது ஏன்?
தமிழகத்தில் மிகப்பெரிய தலைவர்களான காமராஜர், கக்கன், ஏ.எஸ்.பொன்னம்மாள் போன்றவர்களின் வழிகாட்டுதலோடு காங்கிரசை பலப்படுத்த ஒவ்வொரு வரும் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது:–
காங்கிரஸ் ஆட்சி வர வேண்டும் என்று தான் எல்லோரும் கஷ்டப்படுகிறோம். காங்கிரசில் நிறைய கோஷ்டிகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் நமக்கு இருக்கும் கோஷ்டி சோனியா, ராகுல் தான். சாதி, மதம் பார்க்காமல் பொறுப்புக்கள் வழங்கும் ஒரே கட்சி காங்கிரஸ் தான். ஜான்சிராணிக்கு தலைவர் பொறுப்பு வழங்கி இருப்பது இதற்கு ஒரு சாட்சி. பொறுப்புக்கு வந்துள்ள ஜான்சிராணி கோஷ்டி பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும். அதையெல்லாம் தாண்டி அவர் சாதிக்க வேண்டும்.
இப்போது இருக்கும் அரசியல் தலைவர்களில் மனதில் உள்ளதை உள்ளபடி பேசும் ஒரே தலைவர் இளங்கோவன். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் காலையில் எழுந்தவுடன் இளங்கோவன் என்ன சொல்லி இருக்கிறார் என்பதைத்தான் பதட்டத்துடன் பத்திரிகைகளில் பார்க்கிறார்கள். விழுந்து கிடந்த காங்கிரசை தூக்கி நிறுத்தியவர் அவர்.
இன்று சீனியர் ஜூனியர் என்ற பேச்சுக்கே இடம் இருக்க கூடாது. எப்போது கட்சிக்கு வந்தாலும் கட்சிக்கு உழைக்க வேண்டியதுதான் நமது கடமை. காங்கிரசை வெற்றிபெற வைப்பதே நமது லட்சியம்.
சோனியா, ராகுலின் நிர்வாக திறமைக்கு ஜான்சி ராணி நியமனம் செய்தது ஒரு சாட்சி. கோஷ்டிகளை மறந்து எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். நமது எதிர்பார்ப்பு, எண்ணங்கள் எல்லாம் சோனியா, ராகுல் கோஷ்டி வெற்றி பெற வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும்.
இவ்வாறு குஷ்பு பேசினார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.