உத்திரப்பிரதேச தேர்தலை முன்னிட்டு 7 மாநிலங்களில் கவர்னர்களை மாற்ற மோடி முடிவு.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2017) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
அம்மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். அதற்கு உதவும் வகையில் கவர்னர்கள், மத்திய மந்திரிகள் மற்றும் உயர்அதிகாரிகளை அதிரடியாக மாற்ற பிரதமர் நரேந்திரமோடி திட்டமிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்துக்கு முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பெடியை புதிய கவர்னராக அறிவித்த மத்திய அரசு சில மாநில கவர்னர்களை வேறு மாநிலங்களுக்கு மாற்ற ஆய்வு செய்து வருகிறது. சில மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 7 மாநிலங்களில் புதிய கவர்னர்கள் பொறுப்பு ஏற்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் முதல்-மந்திரி அனந்திபென் படேலை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது. இதையடுத்து அனந்திபென் படேலை பஞ்சாப் மாநில கவர்னராக நியமனம் செய்ய மோடி முடிவு செய்துள்ளார்.
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான கல்யாண்சிங் ராஜஸ்தான் மாநில கவர்னராக உள்ளார். அவரை மிக முக்கியமான ஒரு மாநிலத்துக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் தற்போது பா.ஜ.க. ஆட்சி அமைந்துள்ளது. அடுத்தக் கட்டமாக வடகிழக்கு மாநிலங்களில் வலுவாக காலூன்ற பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த திட்டத்துக்கு கைகொடுக்கும் வகையில் கல்யாண்சிங் வடகிழக்கு மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநிலத்துக்கு மாற்றப்படுவார் என்று தெரிகிறது.
கல்யாண்சிங் வேறு மாநில கவர்னராக மாற்றப்படும் பட்சத்தில் உத்தரகாண்ட் மாநில கவர்னர் கே.கே.பால் ராஜஸ்தான் மாநிலத்துக்கு மாற்றப்படுவார். அத்தகைய சூழலில் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட வேண்டும்.
டெல்லி மாநில முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி பி.எஸ்.பாசி உத்தரகாண்ட் மாநிலத்துக்கு கவர்னராக நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இவை தவிர சில முக்கிய மாநிலங்களில் பா.ஜ.க. மூத்த தலைவர்களை கவர்னர்களாக நியமிக்க ஆலோசனை நடந்து வருகிறது.
மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரலான சோலி சோரப்ஜியையும் ஏதாவது ஒரு மாநிலத்தில் கவர்னராக நியமிக்க பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார்..
தமிழக கவர்னர் ரோசய்யா கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி பதவி ஏற்றார். ஒன்றுபட்ட ஆந்திரா மாநிலத்தில் 16 தடவை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்திருந்த அவரை கவுரவிக்கும் வகையில் அப்போதைய காங்கிரஸ் அரசு தமிழக கவர்னராக நியமித்தது.
ரோசய்யாவின் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவு பெற சரியாக இன்னும் 3 மாதங்களே உள்ளன. ஜூன், ஜூலை, ஆகஸ்டுடன் அவர் பதவி முடிகிறது.
எனவே ரோசய்யாவுக்கு பதில் புதிய கவர்னராக வேறு யாராவது நியமனம் செய்யப்படுவாரா? அல்லது ரோசய்யாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக ஆட்சி நிர்வாகத்தில் எந்த ஒரு சிறு மோதல் போக்கையும் கவர்னர் ரோசய்யா கடைப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.