காஷ்மீர் விவகாரத்தை உள்ளத்தை விடுத்து உதட்டிலிருந்து பேசுகிறார் மோடி: குலாம் நபி சரமாரி தாக்கு
பிரதமரின் வார்த்தைகள் இதயத்திலிருந்து வரவில்லை, உதடுகளில் இருந்தே வருகின்றன என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் சாடியுள்ளார்.
மாநிலங்களவையில் இன்று (புதன் கிழமை) காஷ்மீர் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பல்வேறு கட்சியினரும் தங்கள் வாத விவாதங்களை முன் வைத்தனர்.
அப்போது, காஷ்மீர் பிரச்சினை குறித்து முதலில் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், ”நமது பிரதமர் தினந்தோறும் காலை 10 மணியில் இருந்து மாலை 6 மணி வரை, நாடாளுமன்றத்தில்தான் இருக்கிறார். ஆனால் தலித் விவகாரம் குறித்தோ, காஷ்மீர் பிரச்சனை குறித்தோ அவரால் பதில் கூறமுடியவில்லை.
அதேநேரம் அவர் தெலங்கானாவில் இருந்து தலித்துகள் பற்றியும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து காஷ்மீர் வன்முறையைப் பற்றியும் பேசுகிறார். அதனால் அவர் நம் அருகிலேயே இருந்தாலும், நாடாளுமன்றத்தில் இருந்து வெகு தொலைவிலேயே இருக்கிறார்.
பிரதமர் ஆப்பிரிக்கா பற்றியும், பாகிஸ்தான் பற்றியும் ட்வீட் செய்கிறார். ஆனால் காஷ்மீரின் நிலை என்ன? அங்கிருக்கும் மக்களையும் கொஞ்சம் நேசியுங்கள். அங்கே கண்களை இழந்து நிற்பவர்களை கவனியுங்கள்.
மத்தியப் பிரதேசத்தில் மோடி, ‘அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இன்சனியாத் (மனிதாபிமானம்), ஜம்ஹுரியாத் (ஜனநாயகம்), காஷ்மீரியாத் (காஷ்மீரம்) ஆகிய பாதையைத் தேர்ந்தெடுத்தார். நாங்களும் அதே பாதையில் பயணிக்கிறோம்’ என்று வாஜ்பாயின் வார்த்தைகளை முழங்கினார். ஆனால் அவற்றை வாஜ்பாய் பேசினால்தான் நன்றாக இருக்கும். வாஜ்பாய் என்ன நினைக்கிறாரோ அதை மட்டுமே பேசுவார்.
நீங்கள், காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்கிறீர்கள். அது காகிதத்தில் மட்டுமே இருக்கக்கூடாது. இதயத்தில் இருந்து வரவேண்டும். ஒரு வேளை அந்த எண்ணம் இதயத்தில் இருந்திருந்தால், பிரதமர் காஷ்மீரில் 32 நாட்கள் ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகும், நாடாளுமன்றத்தில் அதைப்பற்றிப் பேசாமல் மத்தியப் பிரதேசத்தில் பேசியிருக்க மாட்டார்.
காஷ்மீர் விவகாரத்தில் எப்போதும் வளர்ச்சி, வேலைவாய்ப்பைத் தாண்டி, அரசியலே முன்னால் வந்து நிற்கிறது. அங்கு 33 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருக்கின்றனர். பொதுமக்களை எண்ணிப்பார்த்தால் கவலையாக இருக்கிறது. அரசியல் கட்சிகள், நாடாளுமன்றத்தின் வாயிலாக அவர்களிடம் வருத்தத்தைத் தெரிவிக்கவேண்டும். அமைதியை ஏற்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
அப்போது பேசிய அவைத்தலைவர் அருண் ஜேட்லி, ”காஷ்மீர் இப்போது பதற்றம் நிறைந்த மாநிலமாக உள்ளது. காஷ்மீர் குறித்த கருத்து வேறுபாடுகளைப் பற்றிப் பேச இது சரியான நேரமல்ல. இதை மாநிலப் பிரச்சனையாகப் பார்க்காமல் தேசியப் பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்” என்றார்.
குலாம் நபி ஆசாத்தின் பேச்சுக்குப் பதிலளித்த பாஜக எம்.பி. எஸ்.எஸ். மான்ஹாஸ், ”ஆசாத் காஷ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பது குறித்துப் பேசுவதைக் காட்டிலும் பிரதமரை விமர்சிப்பதிலேயே குறியாக உள்ளார்.
ஜம்முவைத் தவிர்த்து நம்மால் காஷ்மீரைப் பற்றிப் பேச முடியாது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு, லடாக் மற்றும் காஷ்மீர் பகுதிகளை உள்ளடக்கியது. மூன்று பகுதிகளும் மூன்று விதமான மதங்களையும், மூன்று வெவ்வேறு கலாச்சாரங்களையும் உள்ளடக்கியது. ஜம்மு பகுதி, பாகிஸ்தானோடு 500 கி.மீ. எல்லைப் பகுதியைப் பகிர்ந்துகொள்கிறது. 55 சதவீத மாநில மக்கள் ஜம்முவில் வாழ்கின்றனர். அங்கும் படிக்காத இளைஞர்கள் துப்பாக்கிகளைத் தூக்குகின்றனர். லடாக், யூனியன் பிரதேச அந்தஸ்தைக் கேட்டுள்ளது.
ஒட்டுமொத்த காஷ்மீர் பிராந்தியமும் கொந்தளிக்கவில்லை. குஜ்ஜார்கள் அங்கே அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். சில பிரிவினைவாதிகளே தேவையில்லாத பிரச்சனைகளைக் கிளப்பிவிடுகின்றனர். தேசியவாதத்துக்கும் பிரிவினைவாதக்கும் வித்தியாசங்கள் உள்ளன. காஷ்மீர் எறிந்து கொண்டிருக்கவில்லை.
மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வழிகளைப் பின்பற்றி நடந்துவருகிறார். அவரையே குறை கூறிக்கொண்டிருக்காமல் காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் கட்சிகள் ஒன்றுகூடி அமர்ந்து, தீர்வைக் காண வேண்டும்” என்று கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.