இசைப்பிரியா வாழ்க்கை பற்றிய படத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு. சமரசம் மூலம் தீர்வு காண படத்தயாரிப்பாளருக்கு ஐகோர்ட் யோசனை.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போர் மற்றும் டி.வி. நிகழ்ச்சித் தொடர்பாளரும், செய்தி வாசிப்பாளருமான ஷோபா என்ற இசைப்பிரியா இலங்கை ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பெருமளவு நம்பப்படுகிறது. அவரது வாழ்க்கையின் இறுதி நிமிட காட்சிகள் அனைத்து ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு கண்களை குளமாக்கின.
இதுபோன்ற சம்பவங்களை மையப்படுத்தி போர்க்களத்தில் ஒரு பூ என்ற சினிமாவை கே.கணேசன் இயக்கத்தில் ஏ.சி.குருநாத் செல்லசாமி தயாரித்துள்ளார்.
இந்த சினிமாவை திரையிடும் அனுமதிக்கான சான்றிதழை பெறுவதற்காக தணிக்கை வாரியத்திடம் படம் திரையிட்டு காட்டப்பட்டது. ஆனால் அதற்கு சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து அப்பீல் தீர்ப்பாயத்தில் முறையிட்டாலும், அப்பீலை தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டது. எனவே சென்னை ஐகோர்ட்டில் சினிமா இயக்குனரும், தயாரிப்பாளரும் வழக்கு தாக்கல் செய்தனர். கருத்தை வெளியிடும் சுதந்திரத்தில் தலையிடுவதாக அதில் குற்றம்சாட்டியுள்ளனர்.
அந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இசைப்பிரியாவின் தாயார் வகிசன் தர்மினி, சகோதரி டி.வேதரஞ்சனி ஆகியோர் வழக்கு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தப் படத்தை திரையிட்டால் இசைப்பிரியாவின் சோகமான நினைவலைகள் எங்களை தாக்கிக் கொண்டே இருக்கும். அவரது வாழ்க்கையை சினிமாவில் வேறுவிதமாக [போராளியாக] சித்தரிக்கவும் அதிக வாய்ப்புள்ளது. தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வருகிறோம். இலங்கை போரினால் பாதிக்கப்பட்டுள்ள பலர் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து மரியாதையுடனும் வாழ உரிமை உள்ள நிலையில், போர்க்களத்தில் பூ சினிமா வெளியானால் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தியாவில் உள்ள சட்டத்தின்படி, கற்பழிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் எந்த வகையிலும் வெளியிடப்படக்கூடாது. எனவே அவரது வாழ்க்கையை சினிமா, நாடகம், எழுத்து வடிவம் உட்பட எந்த விதத்திலும் வெளியிட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் விசாரித்தார். அவர், இந்த விஷயத்தை சமரசம் மூலம் தீர்க்கலாம் என்று கருதுகிறேன். படத்தை வெளியிடுவது தொடர்பாக குருநாத் செல்லசாமி, கணேசன் ஆகியோர், வகிசன் தர்மினி, டி.வேதரஞ்சனி ஆகியோரிடம், ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில், 20-ந் தேதி [திங்கட்கிழமை] மாலை 3 மணிக்கு காணொலி காட்சி மூலம் பேசி சுமுகதீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பின்னர் எடுக்கப்படும் முடிவுகளை அறிக்கையாக 23-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.