நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பல்நோக்கு மருத்துவமனையை உண்மையான தலைமைச் செயலகமாக மாற்றுவோம்.- கனிமொழி அறிவிப்பு.
தி.மு.க. மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி வருமாறு:–
கேள்வி:– முதல்– அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வரலாறு காணாத நலத்திட்ட, இலவச அறிவிப்புகளோடு வெளியிட்டிருக்கிறார். இது தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா?
பதில்:– தேர்தல் அறிக்கையை தயாரிப்பு பணியில் தான் இத்தனை நாட்கள் ஜெயலலிதா ஈடுபட்டிருந்தார் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட பிறகுதான்… அவர் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை நகல் எடுப்பதற்குத்தான் இத்தனை நாள் ஆகியிருக்கிறது என்று கண்டுபிடித்தேன். பெண்களுக்கு ஸ்கூட்டர்கள் 50 சதவிகித மானியத்தில் வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தவிர மற்ற எல்லா அறிவிப்புகளுமே எங்கள் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பவைதான். ஆனால் எனக்கு மிகுந்த ஆச்சரியம் என்னவென்றால்..,
ஐம்பது சதவிகித மானியத்தில் ஸ்கூட்டர்கள் கொடுப்பதென்றால், 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதிச்சுமை அரசின் தலையில் இன்னும் ஏறும். இது எப்படி சாத்தியம் என்பது கேள்விக் குறிதான்.
கே:– சில ஊடகங்களில் தி.மு.க. அணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உங்களுக்கு மகிழ்ச்சியா?
ப:– ஒரு வகையில் மகிழ்ச்சி தான். ஆனால் அதையும் தாண்டி, எங்கள் தலைவர் கலைஞர் எப்போதுமே, ‘இது போன்ற கருத்துக் கணிப்புகள் முழுமையாக நம்பகத்தன்மை இல்லாதவை’ என்று சொல்லுவார். மேலும் தி.மு.க.வின் தொண்டர்கள், நிர்வாகிகளின் உழைப்பும், மன உறுதியும் இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு அமைவதில்லை. கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்புத்தன்மை, தலைமையிடமிருந்து பரவும் ஆற்றல் போன்ற காரணிகள்தான் தி.மு.க.வை உயிர்ப்போடு இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
கே:– நீங்களும், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறீர்கள். நீங்கள் வெல்வீர்கள் என்று எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது?
ப:– நாங்கள் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெல்வோம். தலைவர் கலைஞர் 6–வது முறையாக தமிழகத்தின் முதல்–அமைச்சராக பொறுப்பேற்பார்.
.ஜெயலலிதா இந்த 5 ஆண்டுகளில் மின்சார உற்பத்திக்காக ஒரே ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை.
கே:– அதே நேரம் ஜெயலலிதா உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி முதலீடுகளை குவித்திருப்பதாக சொல்கிறாரே?
ப:– அந்த முதலீட்டாளர் மாநாட்டுக்குப் பிறகு தமிழகத்தில் எத்தனை தொழிற்சாலைகள் வந்திருக்கின்றன என்று எனக்கு சொல்லுங்கள். ஒரே ஒரு ரூபாய் கூட தமிழகத்துக்கு முதலீடு வரவில்லை. எத்தனை வேலைவாய்ப்புகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன? ஒன்றுமே இல்லை. தொழில் வளம்மிக்க திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. இலவசங்கள் கொடுப்பதாக மிக்சி, கிரைண்டர், மின் விசிறி கொடுத்தார்களே….. நான் பார்க்கிற இடமெல்லாம் மக்கள் சொல்கிறார்கள், அனைத்து பொருட்களும் பழுதாகி விட்டன என்று. அவற்றை பலபேர் எடைக்கு போட்டு விட்டார்கள் என்பது தான் உண்மை.
மேலும் இலவசமாக கொடுக்கப்பட்ட ஆடு, மாடுகள் கூட உரிய பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த 5 வருடங்களும் வீணடிக்கப்பட்ட வருடங்களாகி விட்டன. இன்னொரு உண்மை என்னவென்றால் ஜெயலலிதா இது வரை இருந்த பதவிக் காலங்களிலேயே இதுதான் மிக மோசமானதாகும்.
கே:– நீங்கள் ஆட்சிக்கு வந்தால் ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை மீண்டும் தலைமைச் செயலகமாக மாறுமா?
ப:– உறுதியாக… நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் செயல்படும். முந்தைய எங்கள் தி.மு.க. அரசாங்கம் புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை ஆகியவற்றை மிகுந்த அக்கறையோடும், சிறப்பாகவும் கட்டியெழுப்பியது. நான் பார்த்தவரை அந்த கட்டிடம் மருத்துவமனை ஆக்குவதற்கு உகந்ததே அல்ல. புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக்கி நோயாளிகளை துன்புறுத்துகிறார்…. பழைய குறுகலான இடப்பற்றாக்குறையுள்ள கோட்டையில் தலைமைச் செயலகத்தை செயல்பட வைத்து அதிகாரிகளையம், ஊழியர்களையும் துன்புறுத்துகிறார் ஜெயலலிதா.
கே:– 93 வயதிலும் தி.மு.க. தலைவர் கலைஞர் சுற்றுப்பயணம் போகிறார், மேடைகளில் பேசுகிறார். உங்கள் தந்தையின் ஆற்றலின் ரகசியம்தான் என்ன? உணவுக் கட்டுப்பாடு, யோகா செய்கிறாரா?
ப:– இப்போது அதிகமாக யோகா பயிற்சி செய்வதில்லை. உணவு குறித்து அவர் எப்போதுமே மிகுந்த கவனத்தோடு இருப்பார். பெரும்பாலும் சைவ உணவுகளையே எடுத்துக் கொள்வார். அவர் அதிகாலையிலேயே கண்விழித்து முதல் வேலையாக அனைத்து செய்தித் தாள்களையும் வாசித்து முடித்து விடுவார்.
உழைப்பு… அதிக உழைப்பு தான் அவருடைய இயல்பு. அவர் எப்போதும் மக்களுடன் இருப்பதையே விரும்புகிறார். இதுதான் தலைவருடைய ஆற்றலின் ரகசியம்.
கே:– வரும் ஜூன் 3–ந் தேதி கலைஞரின் பிறந்த நாளில் பெரும் கொண்டாட்டங்களுக்குத் திட்டமிட்டிருக்கிறீர்களா?
ப:– தனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் முதல் வேலையாக மரக்கன்று நடுவதையே தலைவர் வழக்கமாக வைத்திருக்கிறார். இம்முறையும் மரக்கன்று நடுவார்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.