ஷீனா போரா வழக்கில் டிரைவரை அப்ரூவராக ஏற்று மன்னிப்பதாக மும்பை கோர்ட் அறிவிப்பு.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி(43) பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திராணி ஏற்கனவே நடந்த இரு திருமணங்கள் மற்றும் முன்னாள் கணவர்கள் மூலம் பிறந்த 3 பிள்ளைகள் பற்றிய விவரத்தையும் மறைத்து பீட்டர் முகர்ஜியை மூன்றாவதாக மணந்ததாக கூறப்படுகிறது.
பீட்டர் முகர்ஜிக்கு அவருடைய முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா போரா முறை தவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இந்திராணியின் 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த கொலை வழக்கில் இந்திராணி, சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகிய 3 பேரையும் மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூவரும் மும்பையில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்துவரும் மும்பை சி.பி.ஐ., கோர்ட் நீதிபதிக்கு இந்திராணியின் முன்னாள் கார் டிரைவரான ஷாம் ராய் கடந்தவாரம் ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஷீனா போரா கொலை தொடர்பாக தனக்கு தெரிந்த உண்மைகளை கோர்ட்டில் தெரிவிக்க விரும்புவதாகவும் தனக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.
இன்று மும்பை கோர்ட்டில் கார் டிரைவர் ஷாம் ராய் ஆஜரானார். இந்த கொலையை பற்றி தனக்கு தெரியும் எனவும் தனக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாகவும் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
யாருடைய தூண்டுதலும், அச்சுறுத்தலும், மிரட்டலும் இல்லாமல் மனசாட்சிபடி இந்த கொலை வழக்கில் அப்ரூவராக (அரசு தரப்பு சாட்சி) மாறி வாக்குமூலம் அளிக்க விரும்புவதாகவும் தெரிவித்த அவர், ‘ஷீனா போரா எப்படி கொல்லப்பட்டார்?’ என்று நீதிபதி கேட்டபோது, கழுத்தை நெறித்து ஷீனா போரா கொல்லப்பட்டதாக ஷாம் ராய் கூறினார்.
இதையடுத்து, கார் டிரைவர் ஷாம் ராயை இந்த வழக்கில் அப்ரூவராக சேர்த்து கொள்வது தொடர்பாக வரும் 17-ம் தேதிக்குள் தங்களது முடிவை தெரிவிக்கும்படி இவ்வழக்கில் ஆஜராகும் சி.பி.ஐ. வழக்கறிஞர்களை கோர்ட் அறிவுறுத்தி இருந்தது. அவர் இந்த வழக்கில் அப்ரூவராக ஆஜராவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜியின் கார் டிரைவர் ஷாம் ராயை அப்ரூவராக ஏற்றுகொள்வதாகவும், அவரது குற்றத்தை மன்னிப்பதாகவும் மும்பை கோர்ட் இன்று அறிவித்துள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.