ஆந்திர அரசின் நந்தி விருதுகள் அறிவிப்பு சமந்தா சிறந்த நடிகையாக தேர்வு
திரைப்படத்துறையினருக்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சமந்தா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ‘நான் ஈ’ படத்துக்கு 9 விருதுகள் கிடைத்துள்ளன.
ஆந்திர அரசு சார்பில் சிறந்த தெலுங்கு படங்கள் மற்றும் நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் நந்தி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களாக இந்த விருதுகள் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுக் கான நந்தி விருதுகளை ஆந்திர அரசு தற்போது அறிவித்து உள்ளது.
தமிழில் ‘நான் ஈ’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘ஈகா’ என்ற பெயரிலும் வெளியாகி பரபரப்பாக ஓடிய படம் 2012-ம் ஆண்டுக்கான சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த படத்தில் நடித்த சுதீப் சிறந்த வில்லனாகவும், படத்தை இயக்கிய ராஜமவுலி சிறந்த டைரக்டராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இதே படத்தில் பணியாற்றிய கீரவாணிக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும், செந்திலுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதும் கிடைத்துள்ளன. மேலும் சிறந்த பட தொகுப்பாளர், சிறந்த ஆடியோகிராபர், ஸ்பெஷல் எபெக்ட்ஸ், சிறந்த கலை இயக்குனருக்கான விருதுகள் என்று மொத்தம் 9 விருதுகளை இந்த படம் பெற்று உள்ளது.
கவுதம் மேனன் இயக்கிய ‘ஏதே வெள்ளி போயின்டி மனசு’ படத்தில் நடித்த நானிக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்துள்ளது.
இந்த படத்துக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்தது. 2013-ம் ஆண்டுக்கான சிறந்த படமாக ‘மிர்சி’ தேர்வு செய்யப்பட்டது. இந்த படத்தில் நடித்த பிரபாசுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், அஞ்சலி பட்டீலுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்துள்ளன. சிறந்த வில்லன் நடிகராக சம்பத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சிறந்த குணசித்திர நடிகருக்கான விருது பிரகாஷ்ராஜுக்கு கிடைத்துள்ளது.
சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டது குறித்து நடிகை சமந்தா கூறும்போது, “ஏதே வெள்ளி போயின்டி மனசு படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை. என்றாலும் அதில் நடித்த எனக்கு விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.