புதுச்சேரி முதல்வராக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தேர்வு; நமச்சிவாயம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைய உள்ளது. இன்று நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.
முதல்வர் பதவிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் மத்திய மந்திரி நாராயணசாமி ஆகியோரிடையே கடும் போட்டி இருந்தது. இருவரும் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் மேலிட தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையும் சந்தித்து பேசினார்கள்.
நாராயண சாமி தற்போது எம்.எல்.ஏ.வாக இல்லாவிட்டாலும் அவருக்கு முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் உள்பட பலர் அவரை ஆதரித்தனர். மேலிடத்திலும் அவருக்கு செல்வாக்கு இருந்தது. அதேசமயம் நமச்சிவாயத்திற்கு நிச்சயம் முதலமைச்சர் பதவி கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் உறுதியாக நம்பியிருந்தனர்.
ஆனால், முதலமைச்சர் பதவிக்கு நாராயணசாமியை தேர்வு செய்ததால் நமச்சிவாயம் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். காங்கிரஸ் தலைமையை கடுமையாக விமர்சித்து கோஷமிட்ட அவர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்த கிழக்கு கடற்கரை சாலை ஓட்டல் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாராயணசாமியை முதலமைச்சராக தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்ட அவர்கள் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கினர். காங்கிரஸ் கொடியை எரித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் விஸ்வநாதன், மக்களைப் பற்றி காங்கிரசுக்கு கவலையில்லை என்றும், காங்கிரசில் உள்ளவர்கள் தங்களைப்பற்றியே கவலைப்படுகிறார்கள் என்றும் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.