புதுவை முதலமைச்சராகப் பதவி ஏற்றார் நாராயணசாமி.குலாம்நபி ஆசாத், ஸ்டாலின் பங்கேற்பு.
புதுவையில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 30 இடங்களில் 17 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சியை பிடித்தது.
முதல்-அமைச்சராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார். அமைச்சர்களாக நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று மதியம் காந்தி திடலில் நடந்தது. இதற்காக காந்தி சிலைக்கும், நேரு சிலைக்கும் மத்தியில் உள்ள மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
சரியாக 12.10 மணிக்கு பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. முதலாவதாக நாராயணசாமி முதல்- அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் கிரண்பேடி நாராயணசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர்களாக நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். பதவி ஏற்பு நிகழ்ச்சிகள் 15 நிமிடத்தில் முடிந்தன.
இந்த விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி., மேல்சபை காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் முகுல்வாஸ்னிக், ஹரிபிரசாத், செயலாளர் சின்னாரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுவையை சேர்ந்த முன்னாள் முதல்- அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தொண்டர்கள் கூட்டத்தால் விழா பந்தல் நிரம்பி வழிந்தது. பந்தலுக்கு வெளியே கடற்கரை பகுதியிலும் பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அங்கு விழா நிகழ்ச்சிகள் அகன்ற திரை மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பதவி ஏற்பு விழாவையொட்டி கடற்கரையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவுக்கு வந்த அனைவரும் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.