மோடி மந்திரிசபை விரிவாக்கம் ; புதிதாக 19 அமைச்சர்கள் நியமனம்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றது.
தற்போது அமைச்சரவையில் 64 பேர் மந்திரிகளாக உள்ளனர். இவர்களில் 27 பேர் காபினெட் அந்தஸ்து மந்திரிகள். 12 பேர் தனி பொறுப்புடன்கூடிய மந்திரிகள், 25 பேர் ராஜாங்க மந்திரிகளாக உள்ளனர்.
பதவி ஏற்ற அதே ஆண்டு இறுதியில் மத்திய மந்திரி சபையில் பிரதமர் மோடி சிறு மாற்றம் செய்தார். அதன்பிறகு மத்திய மந்திரி சபையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தீவிர ஆலோசனைக்கு பிறகு புதிய மத்திய மந்திரி சபை பட்டியலை பிரதமர் மோடி தயாரித்தார். மத்திய மந்திரிசபையில் 84 பேர் வரை அமைச்சர்களாக பதவி வகிக்க இடம் உள்ளது. எனவே இந்த தடவை மந்திரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
19 பேர் புதிய மந்திரிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 11 மணிக்கு நடந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.
இதற்கிடையே பல மந்திரிகளின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்றைய மந்திரிசபை மாற்றம் பெரிய அளவில் இருந்தது.
உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம், மராட்டியம், மத்திய பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், கர்நாடகா, அசாம் ஆகிய 10 மாநிலங்களில் இருந்து புதிய மந்திரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநில வாரியான பிரதிநிதித்துவம் தவிர நாடெங்கும் உள்ள முக்கிய சாதியினரை திருப்திப்படுத்தும் வகையிலும் மந்திரிசபையை பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.
புதிய மந்திரிகளில் ரமேஷ் ஜிகஜினகி, பகன்சிங், கிருஷ்ணராஜ், அர்ஜுன் ராம் மெக்வால், ராம்தாஸ் அதவாலே, அஜய் தம்தா ஆகிய 5 பேரும் தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
பி.பி.சவுத்திரி, சி.ஆர்.சவுத்திரி இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜாட் இன மூத்த தலைவர்களாவார்கள். இவர்களை மந்திரிசபையில் சேர்த்து இருப்பதன் மூலம் ஜாட் இன மக்களை பிரதமர் மோடி திருப்திபடுத்தி உள்ளார்.
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ் ராம்ராவ் பம்ரி மிகச் சிறந்த புற்றுநோய் நிபுணர் ஆவார். இவர் ஆர்.எஸ்.எஸ். பரிந்துரையின் பேரில் மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.
மத்திய மந்திரி சபையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேருக்கு பிரதமர் வாய்ப்பு கொடுத்துள்ளார். படேல் இனத்தவர்கள் போராட்டம் நடத்தியதால் அந்த இன மூத்த தலைவர்களில் ஒருவரான புருஷோத்தம் ரூபலாவை மந்திரிசபையில் சேர்த்துள்ளனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சர்பானந்தா முதல்-மந்திரி ஆகி விட்டதால், அசாமைச் சேர்ந்த ராஜன் கோகையனுக்கு மந்திரி சபையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இவர் அசாமில் இருந்து தொடர்ச்சியாக 4-வது முறையாக எம்.பி.யாக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியை மேம்படுத்தவும், பா.ஜ.க.வை வலுப்படுத்தவும் இந்த மந்திரிசபை மாற்றம் கை கொடுக்கும் என்று பிரதமர் மோடி நம்புகிறார். இணைமந்திரியாக இருந்த பிரகாஷ் ஜவடேகருக்கு இன்று காபினெட் அந்தஸ்துடன் கூடிய மந்திரி பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பா.ஜனதா கூட்டணியில் உள்ள கட்சிகளில் உத்தரபிரதேசத்தின் அபனாதளம் கட்சிக்கு மட்டும் இன்றைய மந்திரி சபை மாற்றத்தின்போது இடம் வழங்கப்பட்டுள்ளது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி சமீப காலமாக பா.ஜ.க.வுடன் உரசலில் ஈடுபட்டுள்ளது.
புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழாவை சிவசேனா புறக்கணிக்கப் போவதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் சிவசேனா கட்சி சார்பில் மத்திய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள ஆனந்த கீதே அதை மறுத்தார். புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் அவர் கலந்து கொண்டார்.
-அமுதவன்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.