அதிகாரியை கன்னத்தில் அறைந்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. – சமூக வலைதளத்தில் பரவியது
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுரேஷ் லாட். கர்ஜாட் தொகுதியில் இருந்து இவர் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
ராய்காட் மாவட்டத்தில் எண்ணெய் குழாய் பதிப்பதற்காக விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கான கூட்டத்தில் எம்.எல்.ஏ. சுரேஷ்லாட் பங்கேற்றார். இதில் கலந்து கொண்ட ராய்காட் மாவட்ட துணை கலெக்டர் அபய் கர்குட்டார் நஷ்டஈடு வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ்லாட் துணை கலெக்டரை கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
துணை கலெக்டரை எம்.எல்.ஏ. சுரேஷ் லாட் கன்னத்தில் அறைந்ததை அங்கு இருந்தவர்கள் வீடியோ படம் எடுத்தனர். இந்த வீடியோ படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி உள்ளது. இதனால் எம்.எல்.ஏ.க்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதற்கிடையே அரசு அதிகாரியை எம்.எல்.ஏ. சுரேஷ் லாட் கன்னத்தில் அறையவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியதாவது:-
அதிகாரியை அடித்ததாக கூறுவதை எம்.எல்.ஏ. மறுத்துள்ளார். அந்த அதிகாரி மவுனமாக இருப்பது ஏன்? மேலும் அந்த அதிகாரி போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. இதில் இருந்தே அந்த அதிகாரி தாக்கப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆனால் துணை கலெக்டர் அபய் கர்குட்டார் மாவட்ட கலெக்டரிடம் எம்.எல்.ஏ. தன்னை தாக்கியதாக புகார் அளித்து உள்ளார். எழுத்து பூர்வமாக அவர் இந்த புகாரை கலெக்டரிடம் அளித்துள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.