அதிமுகவில் இருந்து அழைப்பு இல்லை. ஜி.கே.வாசன் மக்கள் நலக் கூட்டணியில் சேர வாய்ப்பு.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை வைகோ, திருமாவளவன் ஆகியோர் சந்தித்து மக்கள் நலக்கூட்டணிக்கு வருமாறு ஏற்கனவே அழைப்பு விடுத்து இருந்தனர்.
ஆனால் ஜி.கே.வாசன் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான அழைப்பு வரும் என்று காத்திருந்தார்.
அ.தி.மு.க. தலைமையுடன் இருந்து நேற்று அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அழைப்பு வரவில்லை.
இந்த நிலையில் நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் ஜி.கே.வாசன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்கு வைகோ, திருமாவளவன் இருவரும் வந்திருந்தனர். முன்னதாக வந்த இவர்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு ஒன்றாக உணவு அருந்திக் கொண்டு இருந்தனர்.
பின்னர் வந்த ஜி.கே.வாசனுக்கு வைகோ – திருமாவளவன் ஆகிய இருவரும் மணவிழாவில் இருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 3 பேரும் சந்தித்து பேசினார்கள். 15 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் போது வைகோவும் திருமாவளவனும் ஜி.கே.வாசனை தே.மு.தி.க. – மக்கள் நலக் கூட்டணிக்கு அவசியம் வருமாறு அழுத்தம் கொடுத்தனர்.
அதற்கு அவர் முன்னணி பொறுப்பாளர்களிடம் பேசிவிட்டு கூறுவதாக தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. தரப்பில் இருந்து இதுவரை அழைப்பு வராததால் த.மா.கா. முன்னணி தலைவர்கள் முடிவை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்று வாசனை வலியுறுத்துகின்றனர்.
காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி முடிவை உடனே எடுக்க வேண்டும். தே.மு.தி.க. – மக்கள் நலக்கூட்டணியில் இணையலாம் என நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். அதனால் ஜி.கே.வாசன் விஜயகாந்த் அணியில் சேருவதற்கான வாய்ப்பு உள்ளது.
விஜயகாந்த் அணியில் அவர் சேரும்போது 124 தொகுதியில் இருந்து தொகுதிகள் பிரித்து ஒதுக்கப்படும். ஜி.கே.வசானின் முடிவு பாசிட்டிவ் ஆகத் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.