செல்போன் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு எந்தவித தீங்கும் கிடையாது – சொல்கிறார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது, செல்போன் மற்றும் செல்போன் கோபுர கதிர்வீச்சால் மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் தீங்கு ஏற்படுவதாக கூறப்படுவது குறித்து எம்.பி. ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவிசங்கர் பிரசாத், பதில் அளித்து கூறியதாவது:-
இதுவரை நடத்திய ஆய்வுகள் அத்தனையிலும், செல்போன் மற்றும் செல்போன் கோபுர கதிர்வீச்சால் மனிதர்களுக்கோ, பறவைகளுக்கோ தீங்கு ஏற்படுவதாக கண்டறியப்படவில்லை. இது பற்றி உலக சுகாதார நிறுவனம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திய ஆய்வில் கூட செல்போன் கதிர்வீச்சால் உடல் நலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுவதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது என்றே தெரிய வந்துஇருப்பதாக தெளிவுபடுத்தி இருக்கிறது.
செல்போன் மற்றும் செல்போன் கோபுர கதிர்வீச்சால் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படும் என்ற பிரச்சினை இந்தியாவில் மட்டும் ஏன் எழுப்பப்படுகிறது என்பது எனக்குத் தெரியவில்லை.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் செல்போன் சேவைகள் உள்ளது. ஆனால் இந்த கேள்விகள் அங்கெல்லாம் எழுப்பப்படவில்லை. நாம் ‘டிஜிட்டல் இந்தியா‘வை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுபோன்று பாதகமாக பிரசாரம் செய்வது கவலை அளிக்கிறது.
நாட்டின் பல்வேறு மாநில ஐகோர்ட்டுகள் செல்போன் அல்லது செல்போன் கோபுரங்களால் மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படவில்லை என்பது தொடர்பாக 6 முக்கிய தீர்ப்புகளை அளித்து இருக்கின்றன. அப்படி இருந்தும் செல்போன் கதிர்வீச்சு தொடர்பான தவறான பிரசாரம் ஓய்ந்தபாடில்லை.
பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் செல்போன் கதிர்வீச்சு பற்றி உறுப்பினர்கள் இனிமேலும் இதுபோன்ற கேள்விகளை எழுப்பவேண்டாம். செல்போன் சேவைகளில் பாதுகாப்பு அளவீடுகள் உலக அளவில் மிகவும் கடுமையாக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.