வரி செலுத்தாமல் இனி யாரும் தப்பிக்க முடியாது என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி எச்சரிக்கை விடுத்தார்.
நாடு முழுவதும் ஒரே சீரான சரக்கு, சேவை வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் இனி மத்திய, மாநில அரசுகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, டெல்லியில் நேற்று நடந்த இந்திய பட்டயக் கணக்காயர் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறியதாவது:-
சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் இந்த அரசு பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்து செல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இதுபோன்ற சீர்திருத்தங்களை அரைகுறை முயற்சியுடன் மேற்கொண்டால் எந்த பலனும் கிடைக்காது. எனவேதான் நாட்டில் தக்க தருணத்தில் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
அனைவரும் வரி செலுத்தவேண்டும் என்பதை மத்திய அரசு விரும்புகிறது. ஆனால், நமது நாட்டின் இயல்பான அமைவிற்கு ஏற்ப அரசுக்கு உண்மையான வரித்தொகை வருவதில்லை. வரி வசூல் என்பது மிகவும் குறைவாக உள்ளது.
இதன் காரணமாக ராணுவம், சுகாதாரம், கல்வி, மற்றும் கிராமப்புற வளர்ச்சி போன்ற பல்வேறு துறைகளுக்கு நம்மால் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய முடியாமல் போகிறது.
நாமும் எவ்வளவு காலத்துக்குத்தான் மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கிக்கொண்டே இருப்பது?… மக்களின் மனதில் வரி செலுத்தவேண்டும் என்கிற எண்ணம் வரவேண்டும்.
முந்தைய ஆட்சி காலத்தின்போது, வரி செலுத்துவதில் உள்ள அமைப்பில் இருந்த ஓட்டைகளை மக்கள் பயன்படுத்திக் கொண்டனர். நாட்டுக்கு வரி செலுத்தக் கூடாது என்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கி இருந்தது. இனி இதுபோன்ற சிந்தனையை அவர்கள் கண்டிப்பாக மாற்றிக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறியதாவது:-
இதுபோன்ற மாற்றம் நடைபெறும்போது அமைதியற்ற நிலை இயற்கையாகவே காணப்படும். ஆனால் இதுபற்றி கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. சரக்கு, சேவை வரிக்கு எதிராக எந்த மூலையில் இருந்து எத்தகைய எதிர்ப்பு வந்தாலும், அதற்கு மத்திய அரசு அடிபணிந்து விடாது. தற்போதைய ஜி.எஸ்.டி. முறை மிகவும் வெளிப்படைத்தன்மை கொண்டது. எளிமையானது.
இதனால் வரி செலுத்துவோர் மிகவும் பயன் அடைவார்கள். மேலும் அவர்களுக்கு ஒரேயொரு இடைமுகம்தான் உள்ளது. அதுவும் இணையதளத்தின் வாயிலாக உள்ளது. முன்பு பல்வேறு கையாளுதல் முறைகள் மற்றும் தனிப்பட்ட முறைகள் என பல இடைமுகங்கள் இருந்தன. இது ஊழல் நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மக்களில் பெரும்பான்மையானோர் வரி செலுத்தாமல் இருப்பது தங்களுடைய அடிப்படை உரிமை என்று கருதுகின்றனர். இந்த வாதத்தை எங்களது அரசு ஏற்றுக்கொள்ளாது. நீங்கள் சாலைகளையும், மற்ற வசதிகளையும் அரசிடம் இருந்து பெற்று கொள்ளலாம். அதற்காக வரி செலுத்த வேண்டியது இல்லை என்று நினைத்தால் அதை அரசாங்கத்தால் ஏற்க இயலாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் வணிகர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுவது பற்றி அவரிடம் கேட்டதற்கு, “வரி செலுத்தும் பொறுப்பு வர்த்தகர்களை சார்ந்தது அல்ல. நுகர்வோர் ஏற்கனவே அதற்கான வரியை செலுத்தி விடுகின்றனர். நுகர்வோர் வரி செலுத்த முன்வரும்போது, அதுபற்றி வர்த்தகர்கள் ஏன் கவலைப்படவேண்டும்” என்று பதில் அளித்தார்.
இன்னொரு கேள்விக்கு அவர், “ஜி.எஸ்.டி. மீதான நடைமுறைகள் இணையதளத்தின் வழியாக நடைபெறும் என்பதும், இனி முறையற்ற ரசீதுகளுக்கு இடமில்லை என்ற காரணமுமே வர்த்தகர்களின் கவலைக்கு காரணமாக இருக்கலாம். ஜி.எஸ்.டி.யை திறமையாக கையாள்வதன் மூலம் வரி செலுத்தும் அடித்தளம் வலுப்படும். வரி ஏய்ப்பு தடுக்கப்படும். ஒரே நாடு ஒரே வரி என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது என்பதால் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது” என்றார்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அவசர கதியில் அமல்படுத்தப்பட்டு இருப்பதாக ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனரே என்ற கேள்விக்கு, பதில் அளித்த அருண்ஜெட்லி, “சரக்கு, சேவை வரி விதிப்பு முறை தாமதமாக அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. 15 ஆண்டுகள் விவாதிக்கப்பட்ட பிறகே நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. எனவே இதை முதிர்ச்சியற்றது என கூறுவது சரியானது அல்ல” என்றார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.