மோடி ஆட்சியில் தொலைத்தொடர்பு துறையில் ரூ.45 ஆயிரம் கோடி ஊழல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்கள் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா, சக்திசிங் கோகில், ஆர்.பி.என்.சிங் ஆகியோர் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ், ஐடியா, டாடா, ஏர்செல் ஆகிய 6 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டுவரையிலான கணக்குகளை மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ஆய்வு செய்தார்.
தணிக்கையின் முடிவில், அவர் இந்த ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையில், 6 நிறுவனங்களும் 4 ஆண்டுகளில் வருவாயை குறைத்து காண்பித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
அதன்விளைவாக, மத்திய அரசுக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த திடுக்கிடும் ஆய்வு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல், இந்த தணிக்கை முடிவுகளை மத்திய அரசு மறுஆய்வு செய்து வருகிறது. அந்த நிறுவனங்கள், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தாமல் தவிர்ப்பதற்கு மத்திய அரசே உதவுகிறது.
மோடி அரசின் நட்பு வட்டத்தில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உதவும் நோக்கத்தில், இந்த ரூ.45 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. ஒளிவுமறைவின்மை பற்றி பேசும் மோடி அரசு, இந்த ஊழலை மூடி மறைக்கப்பார்க்கிறது.
பிரதமர் மோடியின் நேரடி அல்லது மறைமுக ஒப்புதல் இல்லாமல் இந்த ஊழல் நடைபெற்று இருக்காது. எனவே, இதற்கு வேறு மந்திரி மீது குற்றம் சாட்டுவது முறையற்றது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு மந்திரியாக இருந்தவரும், தற்போது, சட்ட மந்திரியாக இருப்பவருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி கூறி இருப்பது அனைத்தும் பொய். அது, காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல் ஆகும். அவர்கள் சொன்ன காலகட்டத்தில், காங்கிரஸ் ஆட்சிதான் நடந்தது. அப்போதுதான், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வருவாயை குறைத்து காண்பித்தன.
அந்த நிறுவனங்களிடம் இருந்து அபராதம் உள்பட அனைத்து பாக்கித்தொகைகளும் வசூலிக்கப்படும். அவர்களும் லைசென்சு கட்டணம், ஸ்பெக்ட்ரம் உபயோக கட்டணம் ஆகியவற்றை செலுத்த கடமைப்பட்டவர்கள் ஆவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.