தமிழ்நாட்டில் அதிசயம்; கேபினட் அமைச்சர் முதல்வரை சந்திப்பது ‘செய்தி’- ஜெயலலிதாவைச் சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். முதல் அமைச்சர் ஜெயலலிதா கோர்ட் நடவடிக்கைகளால் இருமுறை பதவி இழந்த நேரத்தில் முதல் அமைச்சராக பதவி ஏற்றவர் இவர். முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இவர் இருந்தார். ஐவர் அணி என்றழைக்கப்பட்ட அமைச்சர் குழுவுக்கு தலைமை வகித்தார். கட்சி மற்றும் ஆட்சி ரீதியாக எந்தவொரு ஆலோசனை என்றாலும் இந்த ஐவர் குழுவினரைத்தான் முதல் அமைச்சர் ஜெயலலிதா அழைத்துப் பேசுவது வழக்கம்.
இந்த நிலையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது நிரூபணம் ஆகும் வகையில் கட்சியில் இருந்து அவர் ஓரம் கட்டப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் கண்டறியப்பட்டு கட்சிப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசியபோது அந்தக் கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.
கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த அமைச்சர் நத்தம் விசுவநாதனும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் முதல்வரை சந்திப்பதற்காக ஓ.பன்னீர் செல்வம் நேற்று காலை சென்னை வந்தார். ஆனால் அவருக்கு ஜெயலலிதா வீட்டில் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. திரும்பிச் சென்ற அவர் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் (அமைச்சர்களுக்கு சென்னையில் தனியே வீடுகள் ஓதுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது) இந்த நிலையில் மாலை ஆறு மணிக்கு ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசுவதற்காக மீண்டும் வந்தார். இந்த முறை ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார்.
ஜெயலலிதாவை பன்னீர்செல்வம் முக்கால் மணிநேரம் சந்தித்துப் பேசினார். தன் மீது எழுப்பப் பட்ட பிரச்சினைகளுக்கு தன்னிலை விளக்கம் அளித்ததாகத் தெரிகிறது.
‘மற்ற கட்சிகளில் கேபினட் அமைச்சர்கள் ஊழலிலோ மற்ற விவகாரங்களிலோ ஈடுபட்டால் அந்த அமைச்சருக்குரிய முதல்வரும் தார்மீகப் பொறுப்பேற்பது வழக்கம். அதிமுகவில் அப்படியான சம்பவங்கள் ஏற்படும்பொழுது முதல்வருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் அந்த அமைச்சர்தான் இதற்குப் பொறுப்பு என்பது போன்றும் ஒரு சித்திரம் இங்கே ஊடகங்களால் வரையப்படுகிறது. கலைஞர் கட்சியில் ஒரு சாதாரண கவுன்சிலர் ஊழலில் ஈடுபட்டால்கூட அதற்கு கலைஞரையும் சேர்த்து வசைபாடிக் குறைகூறும் ஊடகங்கள் இங்கே கூட்டுக்கொள்ளை அடிப்பவர்களைக் கண்டுகொள்ளாமல் அந்த அமைச்சர் மட்டும்தான் தவறு செய்தவர். ஜெயலலிதாவுக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது என்பதுபோல்தான் சீன் போடுகின்றன. அம்மா உடனடியாக நடவடிக்கை எடுத்து விட்டார்கள் என்றும் சொல்கின்றன. அப்படியிருக்க அமைச்சரவையிலிருந்து நீக்கிய அதே அமைச்சரை இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் அமைச்சராக நியமித்துக்கொள்கிறார் ஜெயலலிதா. அப்போது இந்த ஊடகங்கள் கண்டுகொள்வதே இல்லை”- என்று குறிப்பிட்டார் திமுக நிர்வாகி ஒருவர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.