ஜெயலலிதாவின் மரணத்தைத் தன்னுடைய கபட நாடக அரசியலுக்குப் பயன்படுத்தப் பார்க்கிறார் பன்னீர் செல்வம்- தீபா கடும் தாக்கு.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புது வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தேர்தல் பணிமனையை பேரவையின் பொது செயலாளர் ஜெ.தீபா திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஜெயலலிதாவின் சந்தேக மரணத்துக்கு நீதி கிடைக்கும் வகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தீர்ப்பு அமையும். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த சசிகலாவின் பினாமி ஆட்சி தூக்கி எறியப்படும் என நம்புகிறேன்.
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த போது, சசிகலா எழுதி கொடுத்த போலி அறிக்கையை படித்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம். தமிழக முதல்–அமைச்சராக இருந்து கொண்டு, சசிகலாவை சின்னம்மா என அழைத்து தான் வகித்து வந்த பதவிக்கே களங்கம் விளைவித்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம்.
மதுசூதனன் தான் முதன் முதலில் போயஸ்கார்டன் சென்று சசிகலாவை நீங்கள் தான் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என அழைத்தவர். ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், சசிகலா அணியினரும் ஆட்சியை தக்க வைப்பதிலேயே குறியாக உள்ளனர். இவர்கள் தமிழக மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்றோ, தமிழக மக்களின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும் என்றோ நினைப்பது இல்லை.
தற்போதைய தமிழக அரசு முற்றிலும் செயல் இழந்து உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், சசிகலா அணியினரும் போட்டி போட்டுக் கொண்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் கட்டி காப்பாற்றப்பட்ட இரட்டை இலை சின்னத்தை முடக்கி விட்டனர். கட்சியையும், சின்னத்தையும் மீட்டு எடுப்பதற்காகவே இந்த தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். நல்லதொரு அரசாங்கம் எனது தலைமையில் இயங்க வேண்டும் என்பதற்காகவே நான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.