எங்கள் நோக்கம் திமுக அதிமுக இரண்டு கட்சிகளையும் தோற்கடிக்கவேண்டும். அதனால்தான் விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி- கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு பேட்டி.
தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து நல்லகண்ணு கூறியதாவது:–
மக்கள் நல கூட்டணியுடன் தே.மு.தி.க. சேர்ந்து இருப்பதால் வெற்றி வாய்ப்பு அதிகரித்து உள்ளது. ஊழலை ஒழிக்க வேண்டும். மது விலக்கு கொண்டு வரவேண்டும். ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது போன்ற எங்களது நிலைபாட்டை தான் தே.மு.தி.க.வும் கொண்டுள்ளது. எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
மக்கள் நல கூட்டணி குறைந்த இடங்களில் 110 இடங்களில் தான் போட்டியிடுகிறது என கேட்கிறீர்கள், அதனால் எங்களுக்கு கவலையில்லை. பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். பா.ஜனதா, காங்கிரஸ், தமிழ்நாட்டில் தி.மு.க.–அ.தி.மு.க., ஆகியோரை அகற்ற நாங்கள் கூட்டணி சேர்ந்து உள்ளோம். எங்கள் கூட்டணி சமூக மாற்றத்தை கொடுக்கும் மாற்று கூட்டணியாக இருக்கும்.
எங்களது கூட்டணியில் த.மா.கா.வும் சேர வேண்டும் என விரும்புகிறோம். ஊழல் ஒழிப்பு, மதுவிலக்கு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சி ஆகியவற்றை முன்நிறுத்தி பிரசாரம் செய்வோம். எங்கள் கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஏற்கனவே மக்கள் நல கூட்டணி தலைவர்கள் 4 கட்ட பிரசாரம் செய்து உள்ளோம்.
தேர்தல் ஆணையம் வேகமாக செயல்படுவது போல காட்டுகிறது. இதே நிலை கடைசிவரை இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படும் புகார்கள் குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.
கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க.–அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது. மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை, என எல்லா கொள்ளைகளிலும் இரண்டு கட்சிகளுக்கும் பங்கு உள்ளது. எனவே இந்த இரு கட்சிகளும் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. இலவசங்களை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்க முடியாது. மக்கள் நல கூட்டணி கேப்டன் கூட்டணி என நாங்களும் சொல்லவில்லை. அவர்களும் சொல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.