பாராளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.
பாராளுமன்றத்தின் கடந்த சில தொடர்களில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளில் மோதல் போக்கு நிலவியது.
குறிப்பாக டெல்லி மேல்- சபையில் அமளி, கூச்சல் குழப்பம், வெளிநடப்புகள் அன்றாட நிகழ்வுகள் ஆனது. இதன் காரணமாகவும், போதிய பலம் இல்லாததாலும் கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேறிய ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை மேல்-சபையில் மத்திய அரசால் நிறைவேற்ற இயலவில்லை. அது இன்னும் நிலுவையிலேயே இருக்கிறது.
காஷ்மீரில் பெரிய அளவில் வன்முறை சம்பவங்களும், அருணாசல பிரதேசத்தில் ஆட்சி மாற்றமும் நடைபெற்றுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. அடுத்த மாதம் 12-ந் தேதி வரை மொத்தம் 20 அமர்வுகளாக இந்த தொடர் நடக்கிறது.
இந்த தொடரில் ஜி.எஸ்.டி. மசோதாவை டெல்லி மேல்-சபையில் நிறைவேற்றிட மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
கடந்த ஆண்டு இன்னொரு முக்கிய சட்ட திருத்த மசோதாவான ஊழலை அம்பலப் படுத்துவோர் பாதுகாப்பு சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் இன்னும் முழுமை அடையாத நிலையில் உள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இதேபோல் பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், பினாமி சொத்துகள் பரிமாற்ற தடை சட்டம் ஆகிய 2 முக்கிய மசோதாக்களும் நிலுவையில் உள்ளன. இரு அவைகளிலும் மொத்தம் 50-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் முடங்கிக்கிடக்கின்றன.
ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, செய்தி ஒலிபரப்பு மந்திரி வெங்கையா நாயுடு ஆகியோர் கடந்த வெள்ளிக் கிழமை காங்கிரஸ் தலைவர் கள் குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோருடன் பேச்சு நடத்தினார்கள். டெல்லி மேல்-சபையில் ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்றி விட முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.
இந்த மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் அதே நேரத்தில் அண்மையில் காஷ்மீரில் வெடித்த வன்முறை, அருணாசலபிரதேச அரசியல் நிலவரம் குறித்த பிரச்சினைகளை காங்கிரஸ் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்வு, விவசாயிகள் பிரச்சினை, வடமாநிலங்களில் வெள்ளம், வெளிநாட்டு கொள்கைகளில் தோல்வி நிலை ஆகியவை குறித்தும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும்.
மந்திரி அனந்த குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
அனைத்துக் கட்சி கூட்டம் பயன்தரும் வகையில் இருந்தது. எல்லா கட்சிகளும் பாராளுமன்றம் சுமுகமாக செயல்படவேண்டும் எனவும், அதற் காக ஒத்துழைப்பு தருவதாகவும் உறுதி அளித்தன. தகுதி அடிப்படையில் மசோதாக் களை ஆதரிப்பது பற்றி முடிவு செய்வோம் என்று காங்கிரஸ் தெரிவித்தது.
ஜி.எஸ்.டி. மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்றுவது குறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் சில கட்சிகளுடனும் பேசப்பட்டது. அவர்களிடம் நாங்கள் திறந்த மனதுடன் அத்தனை பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தோம். இந்த தொடரில் 16 முக்கிய மசோதாக்கள் நிறைவேறுவதற்காக காத்து இருக் கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.