நான் முதல்வராக வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்- சிபிஐ தலைவர் அச்சுதானந்தன் சொல்கிறார்.
கேரள சட்டசபைக்கு வருகிற மே மாதம் 16ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ், எதிர் கட்சியான கம்யூனிஸ்டு மற்றும் பாரதீய ஜனதா கட்சி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
கேரள முன்னாள் முதல் மந்திரியும் எதிர் கட்சி தலைவருமான அச்சுதானந்தன் கம்யூனிஸ்டு வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கொச்சி தொகுதி கம்யூனிஸ்டு வேட்பாளர் சுராஜை ஆதரித்து கொச்சியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அச்சுதானந்தன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்று உள்ளது. மதுபார் ஊழல், சோலார் பேனல் ஊழல் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். தனது வயது, முதல் மந்திரி அந்தஸ்து ஆகியவற்றை மறந்து கேவலமான முறையில் ஒரு பெண்ணிடம் உம்மன்சாண்டி நடந்து கொண்டுள்ளார். இந்தியாவில் எங்கும் இதுபோல ஒரு முதல் மந்திரி நடந்து கொண்டது கிடையாது. அவரது மகன் சாண்டிஉம்மனும் அந்த பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார்.
நான் அரசியல் அனுபவம் உள்ளவன். 94 வயது மூத்த அரசியல்வாதி. சிறு வயதில் இருந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். முதல் மந்திரி, எதிர்கட்சி தலைவர் என்று பல பதவிகளை வகித்துள்ளேன். இந்த முறை கம்யூனிஸ்டு கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும். நான் முதல் மந்திரி ஆக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். மக்கள் விருப்பப்படி எல்லாம் நடைபெறும். பாரதீய ஜனதா மதவாத கட்சி கேரளாவில் அவர்களால் காலூன்ற முடியாது என்று தெரிந்தும் நாடகம் நடத்துகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.