சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு மனுதாக்கல்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் சாந்தன், ராபர்ட்பயாஸ், பேரறிவாளன், ரவிச்சந்திரன், முருகன், நளினி, ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு சமீபத்தில் தமிழக அரசு கடிதம் எழுதியது.
ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தரப்பில் வாதாடுவதற்கு நியமிக்கப்பட்ட மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் வழக்கு விசாரணையை 1 வாரத்துக்கு தள்ளி வைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ஆகஸ்ட் 1-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி தமிழக அரசு இன்று மனு தாக்கல் செய்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து இருந்தது. சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டு இருந்தது.
இந்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரிதான் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. தமிழக அரசின் மறு சீராய்வு மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இது போன்ற வழக்குகளில் மத்திய அரசிடம் ஆலோசனை கேட்கலாமே தவிர அனுமதி பெற வேண்டிய அவசியமோ, தேவையோ இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த சீராய்வு மனு விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ததற்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.