தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையா பிறந்தநாளை முன்னிட்டு 139 அடி நீள தேசியக்கொடி ஊர்வலம்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மச்சிலிப்பட்டனத்தில் கடந்த 1876ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி பிறந்தவர் பிங்கலி வெங்கையா. மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட இவர், காந்தியின் அறிவுறுத்தலின்படி தேசியக்கொடியை வடிவமைத்தார். 1963-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி தனது 86-வது வயதில் காலமானார். அவரது நினைவாக 2009 மற்றும் 2011ம் ஆண்டுகளில் தபால் தலை வெளியிடப்பட்டது. பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
இந்நிலையில், அவரது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சுவாமி விவேகானந்தா ஸ்வசந்தா சேவா சம்சிதா சார்பில் 139 அடி நீளத்தில் பிரமாண்ட தேசியக்கொடி உருவாக்கப்பட்டு, அதனை உயர்த்தி பிடித்தபடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. விசாகப்பட்டினம் பழைய நகர் பகுதியில் இந்த ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தை தலைமை தாங்கி வழிநடத்திய விவேகானந்தா ஸ்வசந்தா சேவா சம்சிதா தலைவர் ஜாகீர் அகமது பேசுகையில், ‘மூவர்ணக்கொடியை வடிவமைத்த தலைமை வடிவமைப்பாளரான பிங்கலி வெங்கையாவை மறந்துவிடாமல் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும். அத்துடன், அவருக்கு நினைவு இல்லம் கட்டுவதுடன், பாராளுமன்ற வளாகத்தில் மார்பளவு சிலை மற்றும் ஆந்திர தலைநகர் அமராவதியில் சிலை வைக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.