பிரதமர் நரேந்திர மோடி அணிந்த ‘சூட்’ கின்னசில் இடம் பிடித்தது ரூ.4.31 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
பிரதமர் நரேந்திர மோடி அணிந்த ‘சூட்’ ரூ.4.31 கோடிக்கு ஏலம் போனதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் நரேந்திர மோடி, தங்க நிறத்தில் தனது பெயர் பொறிக்கப்பட்ட நீலநிற ‘சூட்’ ஒன்றை அணிந்திருந்தார்.
பிரதமர் அணிந்திருந்த இந்த விலை உயர்ந்த சூட் அப்போதே சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நாட்டில் ஏராளமானோர் வறுமையில் வாடும் நிலையில், பிரதமர் மோடி விலை உயர்ந்த ‘சூட்’ அணிந்து இருப்பது, அவரது ஊதாரித்தனத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
பின்னர் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்காக இந்த ‘சூட்’ கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏலம் விடப்பட்டது. அத்துடன் பிரதமர் மோடிக்கு பரிசாக கிடைத்த 400–க்கு மேற்பட்ட பொருட்களும் ஏலம் விடப்பட்டன.
3 நாட்கள் நடந்த இந்த ஏலத்தில், குஜராத்தின் சூரத் நகரை பூர்வீகமாக கொண்ட வைர வியாபாரியும், தொழில் அதிபருமான லால்ஜிபாய் படேல் என்பவர், பிரதமரின் சூட்டை ரூ.4.31 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார். அந்த பணம் பிரதமரின் கங்கை நதி தூய்மை திட்டத்தில் சேர்க்கப்பட்டது.
இந்த ஏலத்தின் மூலம் மோடி அணிந்த சூட் தனக்கு கிடைத்ததால் பெரும் மகிழ்ச்சி வெளியிட்ட லால்ஜிபாய் படேல், அதை தனது நிறுவனத்தில் காட்சிக்காக வைக்கப்போவதாக கூறினார். மேலும் அந்த ‘சூட்’ தனக்கு சொந்தமாகி இருப்பது பெருமை அளிப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
மிக அதிக விலைக்கு ஏலம் போனதன் மூலம் பிரதமரின் ‘சூட்’ தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இதை அங்கீகரித்துள்ள கின்னஸ் நிறுவனம், ‘மிக அதிக விலைக்கு ஏலம் போன ’சூட்’ (ஆடை)’ என சான்று அளித்துள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.