பாண்டிச்சேரி முதலமைச்சர் திங்கட்கிழமைத் தேர்ந்தெடுக்கப்படுவார். நமச்சிவாயம் முதல்வராக அதிக வாய்ப்பு.
புதுவையில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 17 இடங்களை பெற்று இந்த கூட்டணி ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் 15 இடங்களிலும், தி.மு.க. 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆளுங்கட்சியான என். ஆர்.காங்கிரஸ் 8 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
இதையடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. காங்கிரசில் முதல் – அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை தேர்தலுக்கு முன்பு அறிவிக்கவில்லை. எனவே இனிமேல்தான் முதல்-அமைச்சர் தேர்வு செய்யப்படவேண்டும்.
மாநில காங்கிரஸ் தலைவரும், வில்லியனூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான நமச்சிவாயம் முதல்–அமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்– அமைச்சரை முறைப்படி தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் வருகிற திங்கட் கிழமை புதுவையில் நடக்கிறது. வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூடி முதல்-அமைச்சரை (சட்டமன்ற கட்சி தலைவர்) தேர்வு செய்வார்கள்.
இதை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் மேலிட தலைவர்கள் குலாம்நபி ஆசாத், முகுல்வாஸ்னிக் ஆகியோர் திங்கட்கிழமை புதுவை வருகிறார்கள். அவர்கள் முன்னிலையில் முதல்–அமைச்சர் தேர்வு செய்யப்படுவார்.
மேலிடதலைவர்கள் திங்கட்கிழமை வருவதை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் உறுதி செய்தார்.
மேலிட தலைவர் முகுல்வாஸ்னிக் இன்று சென்னை வந்தார். அவர் இன்று புதுவை வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னையில் அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து விட்டு டெல்லி திரும்பி விட்டார்.
இதற்கிடையே முன்னாள் முதல்-அமைச்சர் வைத்திலிங்கமும் முதல்-அமைச்சர் பதவியை பிடிக்க காயை நகர்த்தி வருவதாக தெரிகிறது. ஆனாலும் நமச்சிவாயத்துக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.
பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த நமச்சிவாயத்தை முன்நிறுத்தியே காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்தது. எனவே அவர்தான் முதல்–அமைச்சராக தேர்வு செய்ப்படுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.