சட்டமன்றத் தேர்தலில் பாரபட்சம், தேர்தல் கமிஷனை எதிர்த்துப் போராட்டம் ; இளங்கோவன் அறிவிப்பு.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேருவின் 53–வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட நேரு படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் குமரி அனந்தன், நாசே ராமச்சந்திரன், பீட்டர் அல்போன்ஸ், செல்வப்பெருந்தகை, மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், ரங்கபாஷ்யம், துறைமுகம் ரவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நிருபரகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பணபலத்தால் அ.தி.மு.க வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சியை பிடித்துள்ளார். இது உண்மையான வெற்றி அல்ல. தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கும் உண்மையான தோல்வி அல்ல.
அ.தி.மு.கவினர் ஒரு ஓட்டுக்கு ரூ.200, ரூ.300, ரூ,500 என பணத்தை வாரி இறைத்துள்ளனர். இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டு அ.தி.மு.க வின் செயல்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் நடந்து கொண்டதை போலதான் இந்த தேர்தலிலும் தேர்தல் ஆணையம் நடந்து கொண்டுள்ளது. தேர்தல் ஆணையம் மீது யார் நடவடிக்கை எடுப்பது? எனவே தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் போராட்டம் நடத்தும்.
சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவரை தேர்ந்தெடுக்க நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டம் மேலிட தலைவர்கள் முகுல் வாஸ்னிக், டெல்லி முன்னாள் முதல்– அமைச்சர் ஷீலா தீட்சித் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.
அதில் காங்கிரஸ் சட்ட மன்ற குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார்.
மதுக்கடை திறப்பை காலை 10 மணியில் இருந்து 12 மணியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது வெறும் கண்துடைப்புதான். இரவு 10 மணி வரை கடை திறந்திருப்பதை முன் கூட்டியே இரவு 7 மணிக்கே அடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மது விலக்கு அறிவிப்பு க்கும் பொருத்தமானதாக இருந்திருக்கும்.
தமிழகத்தில் 3 பேரின் முதல்–அமைச்சர் கனவு தகர்ந்துவிட்டது. எதிர்கட்சிகள், லெட்டர்பேடு கட்சிகள் காணாமல் போய் விட்டன. தமிழகத்தில் 3–வது பெரிய கட்சியாக காங்கிரஸ் வளர்ந்துள்ளது.
சட்டமன்ற கூட்டத் தொடரின் போது தமிழக மக்களின் பிரச்சினை களுக்காக தி.மு.கவுடன் இணைந்து காங்கிரஸ் குரல் கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.