கையில் திரிசூலத்துடன் பிளேனில் பயணித்த ராதேமா மீது வழக்குப் பதிவு.
மும்பையை சேர்ந்த பெண் சாமியார் ராதேமா. கடந்த ஆண்டு கவர்ச்சி உடைகளில் காட்சியளித்த இவரது படங்கள் வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பெண் ஒருவர் கொடுத்த வரதட்சணை கொடுமை புகாரிலும் சிக்கினார். இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கிய பெண் சாமியார் ராதேமா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் விமானத்தில் கையில் திரிசூலத்துடன் பயணித்ததாக மற்றொரு புகாரும் எழுந்தது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் அசாஸ் பட்டேல் என்பவர் மும்பை விமான நிலைய போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், “பெண் சாமியார் ராதேமா மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து கையில் திரிசூலத்துடன் இறங்கினார். விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் எந்தவொரு ஆயுதமும் கொண்டு செல்லக்கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், ராதேமா கையில் திரிசூலத்துடன் பயணித்தது அதிர்ச்சி அடைய செய்கிறது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
ஆனால் அசாஸ் பட்டேல் புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால், அவர் சம்பவம் குறித்து மும்பை அந்தேரி மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தது. கோர்ட்டில் நடந்த விசாரணையில், ராதேமா சம்பவத்தன்று கையில் திரிசூலத்துடன் விமான பயணம் மேற்கொண்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து ராதேமா மீது வழக்குப்பதிவு செய்ய மும்பை விமான நிலைய போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும், இந்த பிரச்சினையில் மற்ற பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியதாக சம்பந்தப்பட்ட தனியார் விமான நிறுவன நிர்வாகம், பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், விமான நிலைய போலீசார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.