ரகுராம் ராஜன் இந்திய குடியுரிமை பெற்றவர்: ரிசர்வ் வங்கி விளக்கம்
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜனின் குடியுரிமை பற்றி பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி சர்ச்சையை எழுப்பினார். “அமெரிக்காவின் கிரீன் கார்டு (நிரந்தர குடியுரிமை அட்டை) வைத்துள்ள ரகுராம் ராஜன் மனதளவில் முழுமையான இந்தியர் அல்ல. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று அவர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
2013-ம் ஆண்டு ரகுராம் ராஜன் கவர்னராக நியமிக்கப்பட்டபோது, பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதாவின் மற்றொரு மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு நோட்டீசு அளித்து, “வெளிநாட்டினர் ஒருவரை எப்படி ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்க முடியும்?” என கேள்வி எழுப்பியது நினைவுகூரத்தக்கது.
இந்த சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “ரகுராம் ராஜன் இந்திய குடிமகன்தான். அவர் இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே டி.வி. சேனல் ஒன்றுக்கு ரகுராம் ராஜன் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சுப்பிரமணிய சாமியின் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையில் மிகவும் தவறானவை. ஆதாரம் இல்லாதவை. அவற்றுக்கு பதில் அளிப்பது, தகுதியற்ற அவற்றுக்கு அங்கீகாரம் அளிப்பதாகி விடும்” என குறிப்பிட்டார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.