ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை 2-வது முறையாக வகிக்க விருப்பம் இல்லை: ரகுராம் ராஜன்
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மீது ஆறு விதமான குற்றச்சாட்டுக்களை கூறும் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ராஜனை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், இதனை பா.ஜ.க. ஏற்பதாக தெரிவிக்கவில்லை.
இவ்வாறு ரகுராம் ராஜன் மீது சர்ச்சைக்குரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், 2-வது முறையாக ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் நீடிக்க விருப்பமில்லை என ரகுராம் ராஜன் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வங்கியின் அலுவலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:-
எனது பதவிக்காலம் வரும் செப்டம்பர் 4-ந்தேதியுடன் நிறைவடைகிறது. பதவிக்காலம் முடிந்தவுடன் அரசிடம் கலந்து ஆலோசித்த பிறகு எனது ஆசிரியப் பணிக்கே மீண்டும் திரும்ப விரும்புகிறேன். எனினும் நாட்டிற்காக எப்போது வேண்டுமானாலும் சேவை செய்ய தயாராகவே இருக்கிறேன். எனக்கு பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்பவர் ரிசர்வ் வங்கியை சிறப்பாக வழிநடத்திச் செல்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பதவிக்காலத்தில் ரிசர்வ் வங்கி செய்த சாதனைகளை பட்டியலிட்ட அவர், தனக்கு உதவி செய்த அனைத்து அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
பதவிக்காலம் முடிந்தவுடன் ரகுராம் ராஜன் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஆசிரியர் பணிக்கே திரும்புவதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.